செய்தி சுருக்கம் | 08 AM | 18-10-2024 | Short News Round Up | Dinamalar
தமிழக மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல் தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 13.5 லட்சம் ரூபாயும், அரசு ஒதுக்கீட்டுக்கு 4.5 லட்சம் ரூபாயும் அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாயும், அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரையும் வசூலிக்கப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சீட் பெற்ற பின் தமிழக கல்லுாரிகளை கைவிடுகின்றனர் அதேபோல் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலையில் இடம் பெற்று சென்றுள்ளனர். அதன்படி அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 1143 சீட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. காலியாக உள்ள இந்த சீட்கள் அடுத்த கவுன்சிலிங்கில் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக இயக்குனர் சங்குமணி கூறினார். வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சென்னை அருகே கரையை கடந்தது. இதைதொடர்ந்து தமிழகத்தில் வட மாவட்டங்கள், லட்சத்தீவு அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மத்திய வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22ல் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியது.