செய்தி சுருக்கம் | 01 PM | 18-10-2024 | Short News Round Up | Dinamalar
காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் ஒருவரை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கொடுமைப்படுத்தியாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மணிக்குமார், இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவருக்கு உத்தரவிட்டிருந்தார். அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கூறப்படும் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீஸிங் ராஜா ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக விசாரிக்கவும் அதே டிஎஸ்பி பணிக்கப்பட்டிருந்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் டிஎஸ்பி, இரு விசாரணையையும் முடித்து ஆணையத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எந்தவித காரணமும் இல்லாமல் அந்த டிஎஸ்பியை, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவிற்கு ஸ்டாலினின் திமுக அரசு டிரான்ஸ்பர் செய்துள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். காவல் துறையினர், தங்களுடைய ஏவல் துறையினராக மட்டுமே செயல்பட வேண்டும் என்ற இந்த ஆட்சியாளர்களின் எண்ணம் ஏற்கத்தக்கதல்ல. இதற்கொரு விடிவு காலத்தை தமிழக மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள் என பழனிசாமி கூறியுள்ளார். --- கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் கொட்டிய கனமழையின் போது பெரும்பாலான இடங்களில் நீர் தேங்கி மக்கள் அவதி அடைந்தனர். மற்றொரு பேரிடியாக ஆயில் நிறுவனங்களில் இருந்து எண்ணெய் கழிவுகள் தேங்கிய நீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எண்ணெய் கழிவுகளை அகற்றவே படாத பாடு பட்டனர். இந்த சூழலில் மணலி சிபிசிஎல் தொழிற்சாலைக்கு எதிரே சாலைக்கு அடியில் செல்ல கூடிய குழாய் ஒன்று உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. இந்த எண்ணெய் சாலையில் தேங்கி அருகே உள்ள குட்டையில் கலக்கிறது. சென்னையில் இரு தினங்களுக்கு முன் கொட்டிய கன மழையில் இது கலந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குழாய் எந்த நிறுவனத்துக்கு சொந்தமானது, குழாய் உடைப்பை சரி செய்யாதது ஏன்? கடந்த ஆண்டை போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும். சீக்கிரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.