செய்தி சுருக்கம் | 01 PM | 12-11-2024 | Short News Round Up | Dinamalar
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை சென்ட்ரல், கிண்டி, மாம்பலம், மந்தைவெளி, கோடம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர்,சேப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சைதைபேட்டை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளிலும் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பெய்துள்ளது. அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ., மீனம்பாக்கம் 3.9 செ.மீ., பள்ளிக்கரணை 3 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ., மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நகர்புறங்கள் மட்டுமின்றி புறநகரிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டி உள்ளது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், சேலையூர், மாடவாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களிலும் விடாது மழை பெய்துள்ளது. இடைவிடாது பெய்த மழையால் நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்பியவர்களும், அதிகாலையில் பணிக்குச் சென்றவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.