செய்தி சுருக்கம் | 08 PM | 07-07-2025 | Short News Round Up | Dinamalar
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை 6.22 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதே நேரத்தில் கோவில் விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன. குடமுழுக்கு விழா நடைபெற்றபோது, வானில் கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டு கோயிலின் ராஜகோபுரத்தின் மீது வந்து அமர்ந்தது. இது அங்கிருந்த பக்தர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. முருகனே வந்ததாக பரவசமடைந்தனர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் 20 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.