செய்தி சுருக்கம் | 01 PM | 17-12-2024 | Short News Round Up | Dinamalar
லோக்சபா, மாநில சட்டசபை மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு, கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. தொடர்ந்து சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். அத்துடன் யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்தம், தேசிய தலைநகர் டில்லி சட்ட திருத்தம், ஜம்மு - காஷ்மீர் புனரமைப்பு சட்ட திருத்தம் ஆகிய மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோக்சபாவில் இதன் மீதான எம்பிக்களின் காரசார விவாதம் நடக்கிறது.