உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | கொந்தளித்த விஜய் | 8 PM | 20-09-2025

இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | கொந்தளித்த விஜய் | 8 PM | 20-09-2025

குஜராத் மாநிலம் பாவ்நகர் சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு நடந்த அரசு விழாவில், கடல் வழி வாணிபம் மற்றும் துறைமுகங்களின் மேம்பாடு குறித்த சமுத்ர சே சம்ருத்தி திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை உறுதி செய்யப்படும். தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். விஸ்வகர்மா ஜெயந்தியான செப். 17 முதல் அக். 2 வரை நாடு முழுதும் பல்வேறு வகை தன்னலமற்ற சேவைகள் அமல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை 1 லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால், வர்த்தகம் களைகட்டும். இந்த நவராத்திரி புதிய வண்ணத்தில் ஜொலிக்கும். கடல்சார் வணிக மேம்பாட்டிற்காகவும், துறைமுகங்களின் வளர்ச்சிக்காகவும் சமுத்ர சே சம்ருத்தி திட்டம் நாட்டிற்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சிக்கான திட்டங்களும் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விஷ்வ பந்து அதாவது உலகின் நண்பன் என்ற வகையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நமக்கென தனிப்பட்ட முறையில் பெரிய எதிரி யாரும் கிடையாது. அப்படி யாரேனும் இருந்தால், அது பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையே ஆகும். நாம் அனைவரும் சேர்ந்து சுயசார்பு கொள்கையை கடைபிடித்து நம் எதிரியை வெல்ல வேண்டும். எதற்காகவும், யாரையும் சார்ந்திருக்காமல் நாம் சுயசார்புடன் முன்னேற வேண்டும். இந்தியர்களின் திறமை எந்த வகையிலும் குறைந்ததல்ல. இந்தியர்களின் திறமையை காங்கிரஸ் குறைத்து மதிப்பிட்டது. பல நீண்ட ஆண்டுகள் தொடர்ந்து நாட்டை ஆண்ட காங்கிரஸ் நம் கடல் வழி வணிகத்தை ஊக்குவிக்காமல் தடுத்தது. ஏற்றுமதியை ஊக்குவிக்காமல் பல பொருட்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்தது. துறைமுகங்கள் மற்றும் கடல் வழி வாணிபத்தில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அதனால் அப்போது தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரித்தது. மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி நடந்தது. ஆனால், உள்நாட்டு கப்பல்களையும், கப்பல்கட்டும் தொழிலையும் காங்கிரஸ் அரசு ஆதரிக்கவில்லை. வெளிநாட்டு கப்பல்களை நம்பி பல பணிகளில் இறங்கியது. இதனால், வெளிநாட்டு கப்பல்களை நம்பியே நம் வர்த்தகம் செயல்பட்டதால், பல பின்னடைவுகளை சந்தித்தோம். இன்று ஒவ்வொரு ஆண்டும், 6 லட்சம் கோடி கப்பல் நிறுவனங்களுக்கு வாடகையாக செலுத்தப்படுகிறது. நம் நாட்டின் ராணுவ பட்ஜெட்டுக்கு நிகரான தொகை, கப்பல் நிறுவனங்களுக்கு வாடகையாக தரப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு எவ்வளவு பணம் வாடகையாக கொடுத்துள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள். இதற்கு முந்தைய அரசுகள் கப்பல் கட்டும் துறையில் கவனம் செலுத்தியிருந்தால், எவ்வளவோ பணம் மிஞ்சியிருக்கும். 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக, சுயசார்பு கொள்கையை கட்டாயம் கடைபிடித்தாக வேண்டும். ஜீப் ஆனாலும் ஷிப் ஆனாலும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். துறைமுகங்கள், கப்பல் கட்டும் தொழில் உள்ளிட்ட பல துறைகள் குறித்த பழைய சட்டங்களில் நாங்கள் திருத்தம் செய்துள்ளோம். இதன் மூலம், நாட்டின் கப்பல் போக்குவரத்து துறை வேகமாக வளரும். பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதல் தொடர்ந்த பல சட்டங்கள் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன. நம் கடற்படையில் இணைக்கப்பட்ட பெரும்பாலான கப்பல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடல் வழி வாணிபம், கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் இந்தியாவை தலை சிறந்த நாடாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிப்பதின் மூலம், அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைவது சாத்தியம். ஒரு கப்பல் கட்டுவதின் மூலம், எம்எஸ்எம்இ முதல் பெரிய பொறியியல் நிறுவனம் வரை பல துறைகள் வளர்ச்சி பெறும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2047ல் நம் கடல் வழி வாணிபத்தை மும்மடங்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாம் விற்பதும், வாங்குவதும் உள்நாட்டு பொருட்களாகவே இருக்கட்டும். சுதேசி பொருட்கள் வாங்குவதை அதிகரிப்போம் என பிரதமர் மோடி பேசினார். #ModiatGujarat| #PMModiSpeech| #PortSchemesInauguration| #BhavnagarNews| #NarendraModi| #SwadeshiIndia| #AtmanibharBharat| #BJP

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ