செய்தி சுருக்கம் | 01 PM | 03-02-2025 | Short News Round Up | Dinamalar
மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை ஜிபிஎஸ் என்று அழைக்கப்படும் guillain barre syndrome என்ற அரிய வகை பாதிப்பு உலுக்க ஆரம்பித்தது. மக்கள் பீதி அடைந்ததால் ஆய்வு நடத்த 8 பேர் குழுவை மத்திய அரசு நியமித்து இருந்தது. இப்போது அதே ஜிபிஎஸ் பாதிப்பால் தமிழகத்தில் சிறுவன் மரணம் அடைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மகன் மைத்தீஸ்வரன் வயது 9. நான்காம் வகுப்பு படித்து வந்தான். ஜனவரி 22ம் தேதி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கிரவுன்ட்டில் சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான். திடீரென நடக்க முடியாமல் கீழே விழுந்தான். அவனது இரண்டு கால்களும் செயல்பட முடியாமல் போனது. அங்கிருந்த இளைஞர்கள் அவனை வீட்டுக்கு தூக்கி சென்றனர். மைத்தீஸ்வரன் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவனை வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சிறுவனுக்கு மருந்து, மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினர். பின்னர் வீட்டில் ஓய்வெடுத்த மைத்தீஸ்வரன், மீண்டும் நடக்க முடியாமல் அவதிப்பட்டான். அவனை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை எக்மோர் குழந்தைகள் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் நடத்திய பல பரிசோதனைகள் முடிவில் தான், நரம்பு மண்டலத்தை முடக்கி உயிருக்கே உலை வைக்கும் ஜிபிஎஸ் என்னும் கிலான் பாரே சின்ட்ரோம் பாதிப்பு சிறுவனுக்கு வந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை கை கொடுக்காமல் மைத்தீஸ்வரன் பரிதாபமாக இறந்தான். பெற்றோர் கதறி அழுதனர். உயிர் குடிக்கும் நோய் என்பதால் மைத்தீஸ்வரனின் சொந்த ஊரில் வேறு யாருக்கும் இதே பாதிப்பு வந்திருக்கிறதா என்று சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பரிசோதனை நடத்த துவங்கி இருக்கின்றனர். புனே நகரில் மட்டும் இந்த நோயால் 100க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டனர். இப்போது தமிழகத்திலும் முதல் மரணம் நேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜிபிஎஸ் என்னும் guillain barre syndrome ஒரு அரியவகை நரம்பியல் கோளாறு. புற நரம்பு மண்டலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் தாக்கப்படுகிறது. உடலின் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்குகிறது. இதனால், கால்கள் அல்லது கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது. தசை பலவீனம், சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நோய்க்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனினும், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி பார்த்தால் சமீபத்தில் உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தாண்டவமாடியது. அதனால் தடுப்பூசியும் மக்கள் போட்டுக்கொண்டனர். ஜிபிஎஸ் பரவல் பின்னணியில் கோவிட் இருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று மத்திய அரசு தீவிர சோதனை நடத்தி வருகிறது.