இன்றைய காலை முக்கியச் செய்திகள் | ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் பதில்! | 8 AM | 04-10-2025
ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூர் விவகாரத்தை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பாஜவினர் பார்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மேடை ஏறியதும், “இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மத்திய நிதியமைச்சர் வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை” என்று எந்தவொரு அடிப்படையுமின்றி வாய்கூசாது பொய் கூறும் முன், சிறிது வரலாற்றுப் பக்கங்களையும் புரட்டிப் பார்க்கலாமே! கஜா புயல், மிக்ஜாம் புயலால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் தமிழகம் அவதியுற்ற போதும் நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? பிரதமர் மோடி, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் ₹13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ, போலி நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அவசியமோ இல்லை.