செய்தி சுருக்கம் | 01 PM | 01-11-2024 | Short News Round Up | Dinamalar
எல்லையை காத்த மாவீரர்களின் தியாகத்தை போற்றும் நாள் தமிழகம் தினத்தையொட்டி எல்லையை பாதுகாக்க போராடிய தியாகிகளை வணங்குவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழகத்தின் எல்லையை காத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்க துவங்கினர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பட்டாசு இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பட்டாசு விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்களிடம் இருந்து 128 அழைப்புகள் வந்தன. பட்டாசு வெடித்ததில் தீ விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்தன என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.