காங்கயம் கார்மல் பள்ளி அசத்தல் வெற்றி| District kho kho tournament
திருப்பூர் அணைப்புதுார் ஏ.கே.ஆர். அகடாமி பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட மாணவியர் கோ - கோ போட்டி இன்று நடந்தது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளி முதல்வர் கணேசன் துவக்கி வைத்தனர். காங்கயம் கார்மல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார். மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் இருந்து, 21 அணியை சேர்ந்த 252 வீராங்கனைகள் பங்கேற்றனர். 14 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதி போட்டியில், காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி அணி, 10 - 11 என்ற புள்ளிக்கணக்கில், தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஊதியூர் சாந்தி நிகேதன் பள்ளி அணி மற்றும் முத்துார் ஸ்ரீ ஆனுார் மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. இதில் 8 - 1 என்ற புள்ளிக்கணக்கில், ஊதியூர்சாந்தி நிகேதன் பள்ளி அணி அபார வெற்றி பெற்றது. பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் ஊதியூர் சாந்தி நிகேதன் பள்ளி அணிகள் மோதின. இதில் 13 - 10 என்ற புள்ளிக்கணக்கில், கார்மல் பள்ளி அணி வெற்றி பெற்றது. மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணிகளும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.