சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள்
திரைத்துறையில் தவிர்க்க முடியாத தலைசிறந்த நாயகனாகவே தமிழ் திரையுலகில் பயணித்து வெற்றிவாகை சூடியவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர். தன் படங்களை பார்த்து மகிழும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த நல்லவைகளை தனது படத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலமாகவோ, வசனங்கள் மூலமாகவோ, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவோ கடத்த முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை மனதிற் கொண்டு, நேர்மறையான கருத்துக்களை மட்டுமே சுமந்து வரும் இவரது படங்களை பார்க்கச் செல்லும் இவரது ரசிகர்கள், என்ன மாதிரியான உற்சாக உணர்வோடு திரையரங்கிற்குச் செல்கிறார்களோ, அதே உற்சாக உணர்வோடுதான் படத்தைப் பார்த்து திரும்பும் போதும் இருக்க வேண்டும் என்பது இவரது கலைப் படைப்புகளின் தன்மை. அப்படிப்பட்ட இவரது திரைப்படங்களில் வரும் கனமான காட்சிகளில் இடம் பெறும் பாடல்களைக் கூட, ஒரு உற்சாக மனநிலைக்கு எடுத்துச் செல்லும் பாடல்களாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் எம் ஜி ஆர். 1974ல் இயக்குநர் சிவி ஸ்ரீதர், முதன் முதலில் எம்ஜிஆரை தனது படத்தில் நடிக்க வைத்து மாபெரும் வெற்றியை தந்த படம் “உரிமைக் குரல்”. இந்த படத்தில் நாயகி லதாவை, வில்லன் நம்பியாருக்கு திருமணம் செய்ய நிச்சியிக்கப்பட்ட நிலையில், நாயகன் எம் ஜி ஆரும், நாயகி லதாவும் தனிமையில் ஒரு மணல் மேட்டில் தங்களது காதல் கை கூடாமல் போய்விடுமோ என்ற மனநிலையில் இருவரும் பாடுவதாக அமைந்திருக்கும் ஒரு சோகப் பாடல்தான் “விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே” என்ற பாடல். மணல் மேட்டில் நடந்தவாறே எம் ஜி ஆரும், லதாவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் செல்ல, கானகந்தர்வன் கேஜே ஜேசுதாஸ் குரலில் “விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே, மஞ்சள் வானம் தென்றல் சாட்சி, உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று பாடலின் பல்லவி சோகத்துடன் ஆரம்பமாக, அப்படியே பாடல் பலவண்ண செட் அரங்கங்களுக்கு பயணப்பட்டு, கண்கவர் ஆடைகளோடு கனவுலக நாயகனாக எம்ஜிஆரும், கனவுலக நாயகியாக லதாவும் வலம் வர, சரணம் வேகம் எடுத்து, பாடலின் தன்மையையும், நிறத்தையும் அப்படியே மாற்றி, பார்க்கும் நம்மை ஒரு உற்சாக மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும். இந்தப் படத்தின் அன்றைய அமோக வெற்றிக்கு இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதே உண்மை. இதேப்போல் எம்ஜிஆரின் மற்றொரு படமான “கலங்கரை விளக்கம்” திரைப்படத்திலும் ஏறக்குறைய இதேபோன்ற ஒரு காட்சியமைப்பில் வரும் பாடலான “பொன்னெழில் பூத்தது புது வானில்” என்ற பாடலிலும் இதே உத்தியை கையாண்டிருப்பர். பல்லவ வரலாற்றை விரும்பிப் படித்து அதிலேயே மூழ்கிப் போய், தன்னை வரலாற்று நாயகி சிவகாமியாகவே நினைத்து வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட வரலாற்று மாணவி லீலா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் சரோஜாதேவியை, குணமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் கதையின் நாயகன் எம்ஜிஆர், அவரை அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் செல்ல, அங்கு சிலை செய்யும் உளி ஓசை கேட்டு, நாயகி ஆபத்தான இடத்தை நோக்கி ஓட, செய்வதறியாது திகைத்த நாயகன் சிவகாமி என வரலாற்று நாயகியின் பெயரைச் சொல்லி அவளை அழைக்க, அழைத்தது பல்லவ மன்னன் என நினைத்து அவளும் திரும்பி அவனைப் பார்க்க பாடல் ஆரம்பமாகும். பல்லவ மன்னனாக எம்ஜிஆரும், சிவகாமியாக சரோஜாதேவியும் மாறி பாடல் வேறு உலகிற்கு பார்க்கும் நம்மை அழைத்துச் செல்லும். சோக ராகங்கள் கூட இவ்வாறு சுக ராகங்களாக மாறும் வித்தை எம்ஜிஆர் திரைப்படங்களுக்கு மட்டுமே சாத்தியம்