அஸ்ஸி (ஹிந்தி)
மன குளத்தில் கல்லெறியும் படைப்புடில்லியில் கணவன், மகனுடன் வசிக்கும் பரிமா, ஐந்து மிருகங்களால் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். சந்தேக அடிப்படையில் ஐவர் மீதும் வழக்கு பதிவாக, குற்றவாளிகளின் அடையாளத்தை பரிமாவால் உறுதிப்படுத்த இயலாத நிலை; வழக்கின் பயணம் எப்படி? பிங்க் திரைப்படம் போல இதன் திரைக்கதையும் ஒரு பலாத்கார வழக்கை சுற்றியே நீதிமன்றத்தில் சுழல்கிறது; அப்படம், பெண்களின் நடத்தை, விருப்பம் குறித்து விவாதித்தது; இது, பாலியல் வழக்கு விசாரணை மற்றும் சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றிப் பேசுகிறது! 'இந்தியாவில் சரா சரியாக தினமும் 80 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன' என்கிற புள்ளிவிபரம், 'இது கடந்து செல்லத்தக்க குற்றமே' எனும் இந்திய ஆண்களின் மனோபாவத்தை காட்டும் அடிப்படையில் பின்னப்பட்ட கதை; பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையில் இருந்து சூழ்நிலைகளை அணுகும் கண்ணோட்டம் புதிது! 'இச்செயலை செய்தது அவன்தானா என்று தனக்கு உறுதிபடத் தெரியாது; ஆனால், அவனது மரணம் தனக்கு நிம்மதியைத் தருவதாக கருதும் பரிமா, 'ஒரு மனுஷன் செத்ததுக்காக சந்தோஷப்படுற மனசு எனக்கு வந்துடுச்சே' என்று விம்முகையில் ஆண் வர்க்கம் தலைகுனிந்தாக வேண்டும்! 'சென்டிமென்ட்' பிழியும் காட்சிகள், வீராவேச மிகை வசனங்கள் இல்லை; ஆனால், 'ஆண்டுக்கு 30 ஆயிரம் பெண்கள் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் நாட்டில், ஒரு வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது நீதி ஆகுமா' உள்ளிட்ட மனதை தொந்தரவு செய்யும் கேள்விகள் நிறைய! 'பாலியல் குற்றவாளிகளை 'என்கவுன்டர்' செய்வது, நாயகன் அவர்களை வதம் செய்வது போன்ற பொது சமூகத்தின் எதிர்பார்ப்புகள் எவ்வளவு ஆபத்தானவை' என்பதையும் விளக்கி இருப்பது சிறப்பு! 'ஒவ்வொரு 20 நிமிடத் திற்கும் ஒரு பாலியல் குற்றம் நிகழ்கிறது' எனும் செய்தியை, ஒவ்வொரு 20வது நிமிடத்திலும் திரையில் காட்டுகிறார் இயக்குனர் அனுபவ் சின்ஹா; 'சுரீர்ர்ர்ர்...' என்கிறது. ஆக...'சமூகத்திற்கான இப்பொறுப்பில் உன் பங்கு என்ன' என்று நம்மை உலுக்கும் படைப்பு