மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா
துாங்காதே... தம்பி துாங்காதே... யார் துாங்கியது... நானா; நான் ஒன்றும் துாங்கவில்லை! யாரப்பா... நீயா; எங்கே... நீ விழித்திருக்கிறாய் எனில் என் கேள்விக்கு பதில் சொல் பார்ப்போம்; 'எப்.சி.ஆர்.ஏ., எனும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத்திருத்த மசோதா கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது; இதை பழனிசாமி ஆதரிக்கிறாரா' எனக் கேட்கும் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலினிடம், 'ஒரு கிறிஸ்தவர் தமிழகத்தின் முதல்வராக வர முயற்சிப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா' என்று நீ கேட்டிருக்கிறாயா? இல்லை... நான் ஏன் அதை கேட்க வேண்டும்? அதானே... நீ விழித்திருந்தால்தானே அதை கேட்க முடியும்! அய்யோ... நான் துாங்கவில்லை! ஓஹோ... அப்படியெனில் இதற்கு பதில் சொல்; 'மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிந்து கோவில்களை மட்டுமே கட்டி எழுப்புகிறார்' என்று திரிணமுல் காங்., முன்னாள் மூத்த தலைவர் ஹுமாயூன் கபீர், இரு கோவில்கள் பற்றிய ஆதாரத்துடன் சொன்னாரல்லவா... அதைக் கேட்டதும், 'தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட ஹிந்து கோவில்கள் எத்தனை' என்று சிந்தித்துப் பார்த்தாயா? இல்லை... ஆனால், நான் துாங்கவில்லை! இன்னுமா என்னை நம்பச் சொல்கிறாய்; சரி... 'தி.மு.க.,வுக்கு சாதகமாக தேர்தல் களம் இருப்பது போல் தெரிகிறது; இதை எப்படி பார்க்கிறீர்கள்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வைக்கப்படும் கேள்வி, மக்களிடத்தில் என்னவிதமான எண்ணத்தை விதைக்க விரும்புகிறது' எனச் சொல் பார்ப்போம்! ப்ப்பூ... இவ்வளவுதானா... 'விசில்' ஊதி விளையாடும் சிறு குழந்தை கூட இதற்கு பதில் சொல்லி விடுமே; 'அடடா... அப்படியா இருக்கிறது களம்... நாம்தான் தவறாக நினைத்து விட்டோமா... சரி, ஊரார் போகும் வழியிலேயே நாமும் போய் விடுவோம்' என அனைவரின் மூளை கழுவும் உத்தி அது! அடடே... பரவாயில்லையே... நிஜமாகவே நீ துாங்கவில்லையா? அதெப்படி... 2021ல் துாங்கியதற்குதான் அனுபவித்து விட்டேனே... இப்போது விழித்திருக்கிறேன்; நானும் அவர்கள் போல் சும்மா நடித்தேன்... அவ்வளவுதான்! சபாஷ்... நிஜமான மூளைக்காரனப்பா நீ!