உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்: அமைதியாய் ஆர்ப்பரிக்கும் தேவி

பாரம்பரிய சின்னமாக ‛யுனெஸ்கோ'வால் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சிற்பம், மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் பல்லவ சிற்பியின் கைவண்ணத்தில் காட்சி தருகிறது.'சக்திக்கும், மகிஷாசுரனுக்கும் இடையில் போர்; அறம் உணர்த்தும் இப்போர் காட்சியை தன் கற்பனை வளத்தால் எளிய மக்களும் புரிந்து கொள்ளும்படி கல்லில் வடித்திருக்கிறார் பல்லவ சிற்பி' என்கிறார் வரலாற்று பேராசிரியர் த.ரங்கநாதன். 'சிற்பத்தில் மகிஷனை கவனியுங்கள்... 'வெல்ல முடி யாத வரம்பெற்ற நான் பெண்ணிடம் தோற்பதா' எனும் அவனது ஆத்திரம் மூக்கு விடைக்க வைத்திருக்கிறது. 'வீரத்தில் நான் சளைத்தவனில்லை' என்பதை நிறுவ, அவன் கரங்களில் கதை; வலக்கண் தேவி மீதாயினும் இடக்கண் தப்பிக்கும் வழி தேடுகிறது பாருங்கள்! 'உச்சகட்ட போர் காட்சி தான்; ஆனால், தேவியின் பாவனையில் சேயைக் கண்டிக்கும் தாயின் அன்பு; எதிரியுடன் ஆக்ரோஷமாகப் போரிடும் அவளது வேகத்தை, சீறிப்பாயும் சிம்ம வாகனம் திறம்படச் சொல்கிறது! 'எட்டுக்கரம் கொண்டு போரிடும் தேவியின் ஒரு இடக்கை வில் தாங்க, வலக்கை அம்பறாத் துாணியில் இருந்து அம்பு எடுக்கிறது. கவனித்தீர்களா... தேவியிடம் துளி பதற்றமில்லை; கண்டிக்கும் பாவனை மட்டுமே இருக்கிறது. ஆக... சிம்மவாஹினியின் கணை தொடுக்கும் கோலம்... ஆகச்சிறந்த களி நடனம்! இந்த நளினத்திற்கு முமு முதற்காரணம் சிற்பி' என்கிறார் பேராசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !