உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  அருவியில் குளித்து... குருவிகளுடன் களித்து!

 அருவியில் குளித்து... குருவிகளுடன் களித்து!

''பறவைகள் சிறகடித்து பறக்க, கூண்டு மிகச்சிறிய இடம் என உணர்ந்த போது, பார்க் அமைக்க முடிவெடுத்தேன். அவை வெளிநாட்டு இன பறவைகள் என்பதோடு, செல்லப்பிராணியாக வளர்ந்து பழகியதால் வெளியில் சுதந்திரமாக விட முடியாது. இதற்காகவே ஒக்கேனக்கலில், ஒரு ஏக்கரில் பார்க் அமைத்து, அதில் 5 ஆயிரம் சதுர அடியை பறவைகளுக்கே ஒதுக்கினோம்,'' என்கிறார், 'ரெயின்போ வோல்டு பார்க்' உரிமையாளர் சுஜய்நாத்.

'செல்லமே' பக்கத்திற்காக அவர் நம்மிடம் உரையாடியவை...

என் சொந்த ஊர் திருபத்துார். எம்.பி.ஏ., முடித்ததும், பிசினஸில் கால்பதிக்க முடிவெடுத்தேன். ஏலகிரியில் செல்பி பாண்டா என்ற பெயரில், போட்டோஷூட் பார்க் மற்றும் ஒரு சாக்லெட் பேக்டரி நடத்தி வருகிறேன். இந்த ரெயின்போ வோல்டு பார்க் அமைக்க, என் பறவைகளே காரணம். வீட்டில் நிறைய பறவைகள் வளர்த்தேன். அதற்கு சிறிய கூண்டு போதுமானதாக இல்லை. அதேசமயம் அவை வெளிநாட்டு இன பறவைகள் என்பதால், திடீரென வெளியில் திறந்துவிட்டாலும், கழுகு, பருந்துகளால் ஆபத்து ஏற்படலாம். இதனால், அதற்கு தனியாக சரணாலயம் அமைக்க முடிவெடுத்தேன். இதை, ஒக்கேனக்கல் அருவிக்கு வருவோர் பார்வையிட ஏதுவாக, சில வசதிகள் ஏற்படுத்தினோம். இந்த பார்க்கின் பரப்பளவு ஒரு ஏக்கர். இங்கு, 5 ஆயிரம் சதுர அடியில், கிட்டத்தட்ட 250 பறவைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். சன்கனுார், லோரிகேட், காக்டெய்ல், காக்கட்டூ, மக்காவ், ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ் என பல்வேறு இன பறவைகள் இங்குள்ளன. இவற்றிற்கு பார்வையாளர்கள் உணவளித்து, அவற்றுடன் புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இத்துடன் 20 முயல்கள், சில இனமீன்கள் உள்ளன. திறந்த நிலை தொட்டியில் மீன்கள் இருப்பதால், பார்வையாளர்கள் உணவளிக்கலாம். சிறுவர்கள் விளையாட நிறைய பொழுதுபோக்கு விளையாட்டுகள், '7டி' தியேட்டர் உள்ளது. உங்கள் உள்ளங்கால்களை கூச்சமடைய செய்யும் 'பிஷ் ஸ்பா' அனுபவம் இங்கே பெறலாம். இதில், பறவைகள் பார்க்கிற்கு கட்டணம் ரூ.100. மற்ற சேவைகளுக்கு தனித்தனி கட்டணம் உண்டு. ஒக்கேனக்கல் வருவோருக்கு இயற்கையின் எழிலில் செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிட, மறக்க முடியாத அனுபவங்களை பெற, இங்கே ஒருமுறை விசிட் அடிக்கலாம். இங்கே வந்து பார்வையிட்ட பலர், தங்களின் பறவைகளும் இப்படி சுதந்திரமாக பறக்கட்டும் என கூறி விட்டு செல்கின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை