பப்பிக்கு எலும்பு முறிவா
மனிதர்களை போலவே, பப்பிக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டால், அதன் தன்மையை பொறுத்து உலோகத்தகடு, ராடு பொருத்தப்படும். இதில் 90 சதவீதம், எலும்பு மீண்டும் வளர இடையூறு ஏற்படுத்தாது. உலோகத்தகடு பொருத்தி குணமான பிறகும், பப்பி நடக்க முடியாமல் அவதிப்பட்டால், மீண்டும் அறுவை சிகிச்சை வாயிலாக, அதை நீக்குவது அவசியம்.அடிபட்டு வலியால் துடிக்கும் பப்பியை மீட்பதற்கு முன் அதன் வாய் பகுதியை 'மவுத் கேப்' மூலம் கட்டிவிடுவது நல்லது. இல்லாவிடில் வலியால், அது உங்களை கடிக்க வாய்ப்புள்ளது. மருத்துவமனைக்கு வந்ததும், மயக்க மருந்து செலுத்தி, எக்ஸ்ரே எடுத்து, எலும்பின் நிலை அறிந்த பிறகே, அடுத்த கட்ட சிகிச்சை துவங்கும்.அறுவை சிகிச்சைக்கு பின், 15-20 நாட்கள் வரை, அடிபட்ட பகுதியை அசைக்காமல் இருக்கும் வகையில், பப்பியை பார்த்து கொள்ள வேண்டும். தனி கூண்டு, சிறிய இடத்தில் வைத்து பராமரித்தால், பப்பி நடக்காமல், ஓடாமல் இருக்கும். இச்சமயத்தில், கால்சியம், விட்டமின் டி3, பாஸ்பரஸ் சத்து தேவைப்படும் என்பதால், பிரத்யேக மருந்துகள் கொடுக்கப்படும். தசைப்பகுதி அடிப்பட்டிருந்தால், புரோட்டீன் நிறைந்த உணவுகள் சாப்பிட கொடுக்கலாம். ஆனால், விபத்தில் நரம்பு முடக்கம் ஏற்பட்டால், அறுவை சிகிச்சை செய்து கூட, குணப்படுத்த முடியாது.பொதுவாக, ஜெர்மன் ஷெப்பர்டு இன பப்பிக்கு, இடுப்பு எலும்பு பகுதி பாதிக்கப்படும். வழுக்கும் தரையில், பப்பியை வளர்த்தால், அதன் எலும்புகள் வளைந்துவிடும். அதிக எடை கொண்ட பப்பிக்கும், எலும்பு பாதிப்பு ஏற்படும் என்பதால், நடக்க சிரமப்பட்டாலோ, ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தாலோ, எக்ஸ்ரே எடுத்து, எலும்பு பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதித்து, உரிய சிகிச்சை முறைகளை பப்பிக்கு பின்பற்றுவது நல்லது.- செ.கிப்சன்,கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், திண்டுக்கல்.