உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / இயற்கையின் எழிலில் இளைப்பாறும் மீன்கள்!

இயற்கையின் எழிலில் இளைப்பாறும் மீன்கள்!

''கொ ட்டும் அருவியின் கீழ் ஒரு பாறை, சுற்றிலும் பசுமை கம்பளம் விரித்தாற் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை, நித்தம் ரசிக்க வேண்டுமெனில், 'பிளாண்டட் அக்குவாரியத்தை' உங்கள் வீட்டிலே அமைக்கலாம்,'' என்கிறார், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன். 'தி ஸ்கேப் நெஸ்ட் அக்குவா ஸ்டுடியோ' (The Scape Nest Aqua Studio) நடத்தும் இவர், தொட்டிக்குள் செடி நட்டு மீன்களை நீந்தவிடும் அமைப்பிலான, 'பிளான்டட்அக்குவாரியம்' உருவாக்கி தருகிறார். நம்மிடம் பகிர்ந்தவை: வெறுமனே மீன்களை மட்டும் தொட்டிக்குள் விட்டு நீந்த விடுவதற்கு பதிலாக, அதில் சில இயற்கை தோற்றத்தை உருவாக்கும் போது, காட்சிக்கு அழகாக இருப்பதோடு, மீன்களும் ஆரோக்கியமாக வளரும். நாம் தற்போது வளர்க்கும் மீன்கள், வெளிநாடுகளில், நன்னீர் ஏரி, அருவிகளில் இயற்கையான சூழலில் பிறப்பவை. சில அறிவியல் தொழில்நுட்பங்கள் வாயிலாக, இம்மீன்களை இனப்பெருக்கம் செய்து, செல்லப்பிராணியாக வளர்க்கிறோம். இவை வாழ்வதற்கான சூழலை தொட்டிக்குள் ஏற்படுத்தி தருவதற்காகத்தான், மோட்டார், சுத்திகரிப்பான் இணைப்பது போன்ற சில மாற்றங்கள் செய்கிறோம். இயற்கையான சூழலை, இம்மீன்களுக்கு ஏற்படுத்தி தரும் போது, அவை மேலும் உற்சாகமாக நீந்தும். இதற்காக, பிளான்டட் அக்குவாரியம் அமைக்க விரும்புவோர், சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.  தண்ணீருக்குள் வளரும் செடிகளையே, இத்தொட்டிக்குள் வைக்க முடியும். இவற்றில், சில செடிகளுக்கு, அதிக கார்பன் டை ஆக்ஸைடு தேவைப்படும். இதற்காக, பிரத்யேகமாக கார்பன் டை ஆக்ஸைடு சிலிண்டர் இணைப்பது அவசியம். இதில், வித்தியாசமான பல நிறங்களை கொண்ட செடிகளை நாம் வளர்க்கலாம்.  குறைந்த கார்பன் டை ஆக்ைஸடை உறிஞ்சி வளரும் செடிகள் வைப்பதாக இருந்தால், சிலிண்டர் இணைக்க தேவையில்லை.தொட்டிக்குள் வைக்க, 100 க்கும் மேற்பட்ட வெரைட்டி செடிகள், அக்குவாரியம் கடைகளில் கிடைக்கின்றன. உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப, இதை தேர்வு செய்து கொள்ளலாம்.  இதேபோல், தொட்டிக்குள் நிறைய 'தீம்'களில் இயற்கை காட்சிகளை உருவாக்க முடியும். அருவி போல, அக்குவாரியம் மணல் கொட்டுவது போலவும், அதற்கு கீழ் மலை இருப்பது போன்ற காட்சி, பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.  வெறுமனே கட்டைகளை நட்டு, அதன்மேல் படர்ந்து வளரும் செடிகளை வைக்கலாம். குகை போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் மேல் செடிகள் வளருவது போன்ற சூழலை உருவாக்கலாம்.  இப்படி செடி நட்டு உருவாக்கும் மீன் தொட்டியை முற்றிலும் கலைக்காமல், அவ்வப்போது 30 சதவீத தண்ணீரை மட்டும் வெளியேற்றி புதிதாக நீர் நிரப்ப வேண்டும். இத்தொட்டிக்கு, நல்ல செயல்திறன் கொண்ட சுத்திகரிப்பான் இணைத்தால், ஓராண்டு வரை கூட, தொட்டியில் அழுக்குகள் படியாமல் பார்த்து கொள்ள முடியும்.  தொட்டியின் அமைப்பை உருவாக்கிய பிறகு, மீன்களை தேர்வு செய்ய வேண்டும். சிலவகை மீன்கள் செடிகளை சாப்பிடும் என்பதால், அவற்றை தவிர்ப்பது அவசியம். பொதுவாக, பிளான்டட் அக்குவாரியத்திற்கு, டெட்ரா, கப்பீஸ், ஏஞ்சல், மாலி, ரெயின்போ வகை மீன்களை விடுவதே சிறந்தது.  இதில், எக்கச்சக்க வெரைட்டி இருப்பதால், தொட்டியின் அளவுக்கேற்ப மீன்களை வாங்கி விட வேண்டும். அப்போது தான் அவை சுதந்திரமாக நீந்தி களிக்கும். இதை பார்க்கும் போது, நீங்களும் புத்துணர்வு அடைவதை உணர்வீர்கள், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி