சென்னையில் பாம்பு, நத்தை, இக்வானா, ஆமை, டெகு, கரப்பான்பூச்சி, டாரன்டுலா என, பல வித்தியாசமான வெளிநாட்டு செல்லப்பிராணிகளை முறையான அனுமதியுடன் விற்பனை செய்யும் அயப்பாக்கத்தைச் சேர்ந்த தீபிகா; பி.ஆர்க்., பட்டதாரி கூறியது: பாம்பு வகைகளிலேயே மிக நீளமாக வளரக்கூடிய அனகொண்டாவை சிறிய இடத்தில் வளர்க்க முடியாது. வீட்டில் வளர்க்க நினைப்பவர்கள், அதற்கேற்ற சூழலை அமைக்க வேண்டும். இவை, ஆப்பிரிக்காவை சேர்ந்த நீரில் வாழும் பாம்பு இனம். இதன் இருப்பிடத்தில் நான்கில் மூன்று பங்கு நீர், ஒரு பங்கு நீரில்லாத பகுதி, ஆங்காங்கே சிறிய செடிகள், இவை மறைவாக ஒளிந்திருக்க பிரத்யேக இடம் இருப்பது அவசியம். கிட்டத்தட்ட 10- 13 அடி வளரும். எலி, முயல், காடை போன்றவற்றை சாப்பிடும். 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும். ஒரு அடி குட்டியாக இருக்கும் போதே வளர்க்கும் பட்சத்தில், வாசனை மூலம் உரிமையாளரை அடையாளம் காணும். விலை 1-5 லட்சம் ரூபாய். டெகு
தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஒரு வகை பல்லி டெகு. 4-6 அடி வரை வளரும். ஆண் டெகுவை காட்டிலும், பெண் இனங்கள் உயரமாக வளரும். மீன் தொட்டியிலே வளர்க்கலாம். இதன் இருப்பிடத்திலும் தண்ணீர் வைக்க வேண்டும். சற்று சூடான இடத்தில் இருக்க விரும்பும். கறுப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும் டெகுவில் இருந்து, பல நிறங்களாக இனப்பெருக்கம் செய்து விற்கப்படுகிறது. மாமிச உண்ணி என்பதால், 2 நாட்களுக்கு ஒருமுறை, எலி, சிக்கன் உணவாக தரலாம்; 15 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இக்வானா போல, இதுவும் உரிமையாளர் மீது ஏறும். அளவில் பெரிதாக இருப்பதோடு, நன்கு விளையாடும். ஒன்றரை அடி உயரமுள்ள ஒரு டெகு, ரூ.50,000 - ரூ. 65,000 வரை விற்கப்படுகிறது. தேள்
ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த தேள், எம்பரர் இனத்தை சேர்ந்தது. கையில் வைத்து விளையாடலாம். நம்மூர் தேள் போல கொட்டாது. டாரன்டுலா வகை சிலந்தி வளர்த்தவர்களுக்கு, இந்த தேள் கையாள்வது மிக எளிது. இதில் நிறைய வகைகள் உள்ளன. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் உயிர்வாழும். புழுக்கள், மடகாஸ்கர் இன கரப்பான்பூச்சியை இவை விரும்பி சாப்பிடும். இதை மீன் தொட்டியிலேயே வளர்க்கலாம். தேங்காய் நாரில் மெத்தை போன்ற அமைப்பை உருவாக்கி, அவை மறைந்திருக்க ஓரிடம் அமைத்து வைத்தால், விளையாடி கொண்டே இருக்கும். இத்தொட்டியை திறந்து வைத்தால், வெளியில் ஓடிவிடும் என்பதால், எப்போதும் மூடியிருப்பது அவசியம். காற்றோட்டத்திற்கு தொட்டியில் துளைகள் இருப்பது அவசியம், என்றார்.