செல்லங்களுக்கும் வரலாம் சுகர்
மனிதர்களை போலவே, நாய், பூனைகளுக்கும் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து வருகிறது. உடலில் இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் இருந்தாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடும். இதில், நாய்களுக்கு பெரும்பாலும் 'டைப் 1' சர்க்கரையும், பூனைகளுக்கு 'டைப் 2' சர்க்கரை பாதிப்பும் ஏற்படுகிறது. நாய்களுக்கு டைப் 1 சர்க்கரை பாதிப்புக்கு, கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாததே காரணம். உடல்பருமன், ஹார்மோன் பாதிப்பு, அதிகளவு ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்து கொள்வது, மரபியல் ரீதியாகவும் இப்பாதிப்பு ஏற்படலாம். உணவுக்கு முன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு, 80-120 மி.லி/டெ.லி., தான் இருக்க வேண்டும். இந்த அளவை தாண்டும் போது, நீரிழிவு பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் பூனைகளுக்கு இன்சுலின் சுரந்தும் உடல் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாத நிலையால், டைப் 2 சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. இதை ரத்த பரிசோதனை வாயிலாக கண்டறியலாம். உணவுக்கு முன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70-150 மி.லி/டெ.லி., இருக்க வேண்டும். அறிகுறிகள் என்ன அதிகளவில் தண்ணீர் குடித்தல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக பசி இருந்தும் உடல் எடை குறைதல், உடல்பருமன், சோர்வு போன்றவை, நாய், பூனைகளுக்கான பொதுவான அறிகுறிகள். தவிர, நாய்களுக்கு கண்புரை பாதிப்பு ஏற்படலாம். பூனைகளுக்கு நரம்பு பலவீனமடைவதால் பின்னங்கால் வலுவிழத்தல் (diabetic neuropathy) , அதிக துாக்கம், முடியின் அடர்த்தி குறைதல், குணப்படுத்த முடியாத தோல் அலர்ஜி மற்றும் சிறுநீரக தொற்றுபோன்ற வேறு சில அறிகுறிகள் ஏற்படலாம். இதற்கு, மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம். சிகிச்சை முறைகள் ரத்தம், சிறுநீர் பரிசோதனையில், சர்க்கரை பாதிப்பு உறுதியாகும் பட்சத்தில், நாய்களுக்கு தினசரி இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும். உரிய நேரத்திற்கு உணவளித்தல், சிறு, சிறு உடற்பயிற்சி, எடை குறைப்பது அவசியம். அரிசி உணவை முழுமையாக நிறுத்த வேண்டியதில்லை. அதன் அளவில் மட்டும் கட்டுப்பாடு அவசியம். பூனைகளுக்கு, குறைந்த கார்போஹைட்ரேட், அதிக புரோட்டீன் உணவுகள் சாப்பிட கொடுக்க வேண்டும். பேக்கரி திண்பண்டங்கள், பிஸ்கட் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிவப்பரிசி, ஓட்ஸ், சிறுதானியங்கள், சிக்கன், மீன் சாப்பிட கொடுக்கலாம். சில நிறுவனங்கள் சர்க்கரை பாதிப்புக்கு பிரத்யேக உணவுகளை தயாரிக்கின்றன. மருத்துவர் ஆலோசனை பேரில் வாங்கி தரலாம். தாமதிக்க கூடாது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதீதமாக இருத்தல், அதாவது, 300-400 மி.லி/ டெ.லி இருப்பது, சாப்பிடாமல் இருத்தல், அடிக்கடி வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், மிகுந்த சோர்வாக இருத்தல் போன்ற அறிகுறிகள் சர்க்கரை கீட்டோ அசிடோசிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான நிலையாக இருக்கலாம். இச்சமயங்களில் உடனடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம். ஆரம்பத்திலே சர்க்கரை பாதிப்புக்கு உரிய சிகிச்சை மற்றும் உணவு மேலாண்மையில் கவனம் செலுத்தினால், செல்லப்பிராணிகள் ஆயுள் முழுக்க ஆரோக்கியமாக வலம் வரும். - டி.பிரபாகரன், அரசு கால்நடை மருத்துவர், கோவை.