இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமல்ல!
மனிதகுலத்தின் ஆரம்ப காலம் தொட்டே அவர்தம் வாழ்வியலுடன் தெருநாய்களும் பயணிக்கின்றன. தனக்கு வேலைகளை செய்ய, அவற்றை பழக்கப்படுத்தி வளர்த்து வந்தனர். பின்பு அவற்றின் தேவை குறைந்ததும் தெருக்களில் விட்டதால், இனப்பெருக்கம் அதிகரித்தது. இந்தியாவில் 79.9 மில்லியன் தெருநாய்களாக உயர்ந்துள்ளது.நம் நாட்டின் மக்கள் தொகையை கணக்கிடுகையில், 18 நபர்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில், தெருநாய்கள் பெருக்கமடைந்துள்ளன. இவ்வளவு தெருநாய்களும், திடீரென ஒருநாள் வானத்தில் இருந்து குதித்தோ அல்லது எங்கிருந்தோ தோன்றியதோ அல்ல என்ற, அடிப்படையான புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும். இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே, தீர்வு. இவற்றை அழிப்பதோ, அதன் வசிப்பிடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதோ, உணவு, தண்ணீர் வழங்காமல் வதைப்பதோ சட்டப்படி குற்றம்.ஓட்டல், மார்க்கெட், இறைச்சி கடைகள், குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் மீதமுள்ள உணவுப்பொருட்களை சாப்பிட்டு தான் பெரும்பாலான தெருநாய்கள் உயிர்வாழ்கின்றன. சில தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆங்காங்கே, தெருநாய்களுக்கு உணவளிக்கின்றனர்.ஆனால், பெரும்பாலான நாய்களுக்கு, ஒருவேளை உணவு கூட கிடைப்பதில்லை. இதைப்பற்றி, அரசுக்கும் போதிய அக்கறையில்லாத நிலை என்பது, கொரோனா கால ஊரடங்கு சமயத்தில்தான், பட்டவர்த்தனமாக தெரியவந்தது. ஊரடங்கின் ஆரம்ப நிலையில், தெருநாய், பூனைகளுக்கான உணவுக்கு, அரசு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அதுசார்ந்து, எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பல இடங்களில், தன்னார்வலர்கள் அவற்றிற்கு உணவு வழங்க, அனுமதி பெறுவதற்கே, பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.இதில், அரசை தாண்டி, ஒவ்வொரு தனிமனிதருக்கும் பங்குள்ளது. தங்களை சுற்றி வாழும் உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுமென, இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை கடமையாக (விதி எண்: 51(ஜி)) குறிப்பிட்டுள்ளது. இக்கடமையை செய்யவிடாமல் தடுப்பது எது என்ற கேள்வி, நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டும். இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. இங்கே, சுற்றுச்சூழலின் சீரான இயக்கத்திற்கு, அனைத்து உயிரினங்களின் பங்களிப்பும் அவசியம்.- பபிதா ராஜ், வழக்கறிஞர் மற்றும் நிறுவனர், மாத்வராஜ் அனிமல் கேர் டிரஸ்ட், உடுப்பி.