வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நன்றி.
''பிறந்து கண் கூட திறக்காத நிலையில், கோவை, உக்கடம், மீன் மார்கெட் அருகே, ஒரு பூனைக்குட்டியை வீசிவிட்டனர். பசியால் அது கத்திக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். தாமத சிகிச்சையால், ஒரு கண்ணில் பார்வை பறிபோனதாக தெரிவித்தனர். வெகு சில நாட்களிலேயே, மற்றொரு கண்ணும் பாதிக்கப்பட்டது. இப்படி தினசரி, ரயில்வே ஸ்டேஷன், குப்பை தொட்டி, நடு ரோட்டில் வீசி எறியப்படும் பூனைகளை மீட்டு அதை பராமரித்து, தத்தெடுப்புக்கு அனுப்புவது மிக பெரிய சவாலாக இருக்கிறது,'' என்கின்றனர் ரிஷ்வானா, தர்ஷினி. கோவையை சேர்ந்த ஐ.டி., ஊழியர்களான இவர்கள், 'மியாவ் ஆப் கோயமுத்துார்' (Meow of Coimbatore) என்ற பக்கத்தை துவக்கி, 300க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பூனைகளுக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி தருகின்றனர். இவர்களுடன் ஒரு உரையாடல்...
பூனைகளுக்காக மட்டும் ஏன்?
நாய்களுக்கு நிறைய தன்னார்வ அமைப்புகள், காப்பகங்கள் செயல்படுகின்றன. பூனைகளுக்கு தான் அப்படி எதுவும் இங்கில்லை. நாய்களுக்கான காப்பகத்தில் பூனைகளை தங்க வைக்க முடியாது. அவை மிகவும் சென்சிட்டிவானது என்பதால், எளிதில் நோய் தொற்று பரவும். இதனால், அடிபட்டு தெருவில் கிடப்பவை, நோய்வாய்ப்பட்டவை, பிறந்து சில நாட்களிலே கைவிடப்பட்ட பூனைகளை மீட்கும் போது, மருத்துவ சிகிச்சைக்கு பின் அவற்றை குறிப்பிட்ட சில நாட்கள் பராமரிப்பது சவாலான காரியமாக இருக்கிறது. களத்தில் சந்திக்கும் பிரச்னை என்ன?
பூனைகளை மீட்க நிறைய அழைப்புகள் வருகின்றன. ஆனால், சிகிச்சைக்கு பின் ஓரிரு நாட்கள் மட்டும் தங்க வைக்க முடியுமா என கேட்டால், யாரும் ஒத்துழைப்பதில்லை. சில தன்னார்வலர்கள், நண்பர்கள் மருத்துவ செலவினங்களுக்கு உதவுகின்றனர். கால்நடை மருத்துவர்களிடம் கட்டண பாக்கி வைப்பதும் உண்டு. யாருமே தத்தெடுக்க முன்வராத போது தான், அவற்றை பராமரிப்பது கடினமாக இருக்கிறது. சிலர் தெருவில் சுற்றித்திரியும் பூனைகளுக்கு, சில நாட்கள் உணவு வைப்பர். அதுவும் அவ்வீட்டையே நம்பியிருக்கும். திடீரென அது குட்டி போட்டால், தாய்பூனையுடன் குட்டிகளையும் சேர்த்து சாக்கு மூட்டையில் கட்டி எங்கேயாவது போட்டுவிடுவர். பிறந்த பூனைகளை மீட்பது தான் அதிகரித்து கொண்டே வருகிறது. பூனைகளுக்கு உணவளிப்பது நல்ல விஷயம். அத்துடன் அவற்றிற்கு தடுப்பூசி, கருத்தடை சிகிச்சையும் செய்ய முன்வர வேண்டும். அப்படி முடியாதபட்சத்தில் எங்களை போன்ற தன்னார்வ அமைப்புகளை தொடர்பு கொண்டால், மருத்துவ செலவுகளை ஏற்று கொள்வோம். ஆனால், அவை குணமாகும் வரை மட்டும் பராமரிக்க மக்கள் முன்வர வேண்டும். இப்படி மீட்கும் பூனைகளை தங்க வைக்க, காப்பகம் அமைக்க, பொருளுதவி தேவைப்படுகிறது. குறைந்த வாடகைக்கு இடம் கிடைத்தால் கூட போதும். மற்ற செலவுகளை சமாளித்து கொள்வோம். இவர்களோடு கைக்கோர்க்க விரும்பினால், gmail.com-ல் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.