உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / பல கோடி சொத்து மீட்கவிடாமல் பிரமுகர் சேட்டை!

பல கோடி சொத்து மீட்கவிடாமல் பிரமுகர் சேட்டை!

க லெக்டர் ஆபீசுக்கு செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் வீட்டில் இருந்து சீக்கிரமாகவே ஸ்கூட்டரில் புறப்பட்டனர். பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''என்னக்கா, ரூரல் ஏரியாவுல ஒரே நேரத்துல, 90 குழுக்களை களத்துல இறக்கி, போதைப்பொருள் சேல்ஸ் பண்ற கும்பலை எஸ்.பி., கார்த்திகேயன், அரெஸ்ட் செஞ்சிருக்காராமே,'' என ஆரம்பித்தாள். ''ஆமாப்பா... 'ஆபரேஷன் கிளீன் கோவை'ங்கிற பேர்ல, 'ரெய்டு' நடத்தியிருக்காங்க. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் போர்வையில, காலேஜுக்கு பக்கத்து ஏரியாக்கள்ல ரூம் எடுத்து தங்கியிருந்து போதைப்பொருள் சேல்ஸ் பண்றவங்களை, 'ஸ்கெட்ச்' போட்டு துாக்கியிருக்காங்க. கஞ்சா, கூல் லிப்போடு, ஆயுதங்களும் இருந்துச்சு. கூலிப்படையை சேர்ந்தவங்களும் நம்மூர்ல 'கேம்ப்' அடிச்சிருக்காங்க. அது சம்பந்தமான, 'என்கொயரி'யை ஆரம்பிச்சிருக்காங்க. எஸ்.பி.,யின் துணிச்சலான இந்த ஆக்சனை, பல தரப்பிலும் பாராட்டுறாங்க,'' ரைட்டரின் ராஜ்ஜியம் ''சிட்டி லிமிட்டுக்குள்ள இருக்கற, ஒரு ஸ்டேஷன் நிர்வாகத்தை ஒரு ரைட்டர் கைக்குள்ள வச்சிருக்காராமே...'' ''யெஸ்... ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற அந்த நாலெழுத்து ரைட்டர், வசூல் வேலையை கவனிச்சிக்கிறாரு. அதனால, ஸ்டேஷன்ல அவரு சொல்றதே வேதவாக்கு. வேற யாரு சொல்றதையும் இன்ஸ்., காது கொடுத்து கேட்கறதில்லை. அந்தளவுக்கு இன்ஸ்.,சும், ரைட்டரும் நெருக்கம். கலெக்சன் அமவுன்ட்டை கரெக்டா பங்கு பிரிச்சுக் கொடுக்கறதுனால, அவர் என்ன செஞ்சாலும் கண்டுக்கறது இல்லையாம். அதனால, தனி ராஜ்ஜியமே நடத்திட்டு இருக்காருன்னு சொல்றாங்க; மத்த போலீஸ்காரங்க என்ன செய்றதுன்னு தெரியாம தவிக்கிறாங்க. லேடி எஸ்.ஐ., முயற்சி ''ஒரு லேடி எஸ்.ஐ., சீர்திருத்தப் பள்ளியில இருக்கற சின்ன பசங்களை திருத்துறதுக்கு, ரொம்பவே மெனக்கெடுறாராமே...'' ''அது, சிங்காநல்லுார் ஸ்டேஷன்ல டியூட்டி பார்க்குற 'டிராபிக்' எஸ்.ஐ., சரண்யா. சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கற பசங்களை, அப்பப்போ ஸ்டேஷனுக்கு வரவச்சு, டிராபிக் ஒழுங்குபடுத்துற வேலையில ஈடுபடுத்தறது வழக்கம். சிங்காநல்லுார் ஸ்டேஷனுக்கு வந்த பசங்களை தினமும், 10 திருக்குறள் படிக்க வச்சு, அதுக்கான விளக்கத்தை சொல்லிக் கொடுத்து, நல்ல ரூட்டுல கொண்டு வர்றாராம். அவரோட முயற்சியை மத்த போலீஸ்காரங்க பாராட்டுறாங்க...'' போலீசார் அலட்சியம் ''செல்வபுரத்துல இருக்கற குற்றப்பிரிவு போலீஸ்காரங்க, எந்த புகார் கொடுத்தாலும் ஆக்சன் எடுக்கறதில்லைன்னு, 'பப்ளிக்' புலம்புறாங்களாமே...'' ''அதுவா... செல்வபுரம் ஏரியாவுல கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஒரு வீட்டுக்குள்ள நுழைஞ்சு நகை, பணத்தை லவட்டிட்டு போயிட்டாங்க. அந்த விவகாரத்துல திருட்டுக்கு கும்பல் கூட 'லிங்க்' இருக்கும் போலிருக்கு. மூனு நாளைக்கு அப்புறம் சம்பவம் நடந்த மாதிரி, சி.எஸ்.ஆர்., போட்டிருக்காங்க; அதையும் ஒரு வாரம் கழிச்சு கொடுத்திருக்காங்க,'' ''எந்த ஆக் ஷனும் எடுக்காததால, புகார் கொடுத்தவர், ஸ்டேஷனுக்கு போயி விசாரிச்சிருக்காரு. அதுக்கு, 'உங்க குடும்பத்துல ஒருத்தரே திருடியிருக்காங்க; உங்களுக்குள்ள பேசிக்கிங்க'ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஆனா, 10 ஆயிரம் ரூபா வச்சிருந்த பர்ஸ் மட்டும் வீட்டுக்கு பக்கத்துல கிடந்திருக்கு. 'சிசி டிவி' வீடியோவை, ஸ்டேஷன்ல கொடுத்திருக்காங்க. ஒரு வாலிபர் பணத்தை எடுத்துட்டு பர்சை துாக்கியெறியற காட்சி இருந்திருக்கு. அதுக்கப்புறமும் ஆக்சன் எடுக்கலை. இப்போ, அந்த ஆசாமி, சமூக வலைதளத்துல போட்டுருக்கற போட்டோவுல, அவர் போட்டிருக்கிற நகை, திருடுபோன நகை மாதிரி இருக்குன்னு, ஆதாரம் காட்டியிருக்காங்க. இந்த விஷயத்துல போலீஸ்காரங்க அலட்சியமா இருக்கறதா, பாதிக்கப்பட்டவங்க சொல்றாங்க,'' ஆளுங்கட்சி நெருக்கடி ''அதெல்லாம் ஓகே.... ஆளுங்கட்சியில சேரச்சொல்லி, டவுன் பஞ்சாயத்து சேர்மன் ஒருத்தருக்கு நெருக்கடி கொடுக்குறாங்களாமே...'' ''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். அவரு எந்தக்கட்சியும் சேராதவரு; சுயேச்சையா நின்னு ஜெயிச்சு டவுன் பஞ்சாயத்து சேர்மனா இருக்காரு. அவரை ஆளுங்கட்சியில சேரச் சொல்லி, நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'டை கவனிக்கிற பொறுப்பாளர் நெருக்கடி கொடுக்குறாராம். அசைஞ்சு குடுக்காம இருக்கறதுனால, அவர் பேரை டேமேஜ் பண்ண, ஆளுங்கட்சி தரப்புல முயற்சி செய்றாங்களாம். நல்லா போயிட்டு இருக்கற நிர்வாகத்துல குழப்பத்தை ஏற்படுத்துறாங்களாம். சேர்மன், கவுன்சிலர்கள்கிட்ட மிரட்டுற தொனியில, ஆளுங்கட்சி நிர்வாகிகள் பேசுறதா சொல்றாங்க,'' ''நம்மூருக்கு மினிஸ்டர் நேரு வந்திருந்தாரே...'' ''ஆமா மித்து. செம்மொழி பூங்கா ஸ்டேட்டஸ் தெரியறதுக்காக வந்திருக்காரு. கொஞ்ச துாரம் போயி சுத்திப்பார்த்த அவரு, 'எப்பதான் வேலையை முடிப்பீங்க'கன்னு ஆபீசர்கள்கிட்ட கேட்டிருக்காரு. கவர்மென்ட் சைடுல, 39 கோடி ரூபா வர வேண்டியிருக்கு; 'பப்ளிக்'கை ஈர்க்குற மாதிரி அழகுபடுத்துற வேலை செய்றதுக்கு கூடுதலா, 50 கோடி தேவைப்படுது. கொடுத்தா 45 நாள்ல வேலையை முடிச்சுரலாம்னு, நேருக்கு நேராவே சொல்லிட்டாங்களாம்,'' ''அதுக்கு அவரு, 39 கோடியை ரெண்டு நாள்ல ரிலீஸ் பண்ணச் சொல்றேன். 50 கோடி சம்பந்தமா சி.எம். கவனத்துக்கு கொண்டு போறேன்னு சொல்லியிருக்காரு...'' உளவுத்துறை ரிப்போர்ட் ''உளவுத்துறையில இருந்தும் 'என்கொயரி' செஞ்சு 'ரிப்போர்ட்' அனுப்பி இருக்கறதா கேள்விப்பட்டேனே...'' ''அதெல்லாம் ரகசிய சமாச்சாரம்ப்பா... 'ட்ரோன் சர்வே' எடுக்குறதுக்கு நாலு பிரைவேட் கம்பெனி இருக்கு. 'சர்வே' எடுக்க கவர்மென்ட் தடை போட்டுருக்கு. இருந்தாலும், மறைமுகமா இன்னமும் சர்வே நடந்துக்கிட்டுதான் இருக்குன்னு சொல்றாங்க. கார்ப்பரேஷன் ரிஜிஸ்தர்ல, 500 சதுரடின்னு இருக்கு. ஆனா, 1,000 சதுரடிக்கு கட்டடம் இருக்குன்னு சொல்லி, மறுபடியும் அளந்து, சொத்து வரியை திருத்திட்டு இருக்காங்க,'' ''இதுக்குன்னு பிரத்யேகமா, ஒரு 'ஆப்' பயன்படுத்துறாங்க. அதுல, பதிவேற்றம் செஞ்சதும் பில் கலெக்டர்கள் நேர்ல ஆய்வு செஞ்சு, சொத்து வரியை மாத்தி அமைச் சிட்டு வர்றாங்க. 'பப்ளிக்' சைடுல அதிருப்தி வர்றதுனால, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறாங்க. ஆபீசர்ஸ் கண்டுக்காததால, கட்சி தலைமைக்கு தகவல் சொல்லியிருக்காங்க. மேலிடத்துல இருந்து கேட்டதுனால, உளவுத்துறையில இருந்து விசாரிச்சு, 'ரிப்போர்ட்' அனுப்பியிருக்காங்க,'' ஆளுங்கட்சி அழுத்தம் ''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷனுக்கு சொந்தமான, 10 கோடி ரூபா 'ரிசர்வ் சைட்'டை மீட்கறதுக்கு, ஆளுங்கட்சி பிரமுகர் முட்டுக்கட்டை போடுறாராமே...'' ''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். 52வது வார்டு, ஈ.வெ.ரா., நகர்ல இருக்கற 'ரிசர்வ் சைட்'டை மீட்கறதுக்கு, டவுன் பிளானிங்காரங்க எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்காங்க. ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவா செயல்படுறதா, 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு. அவரே, கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஆக்கிரமிப்பை எடுக்க விடாம, தடுத்து வச்சிருக்கறதா சொல்றாங்க,'' கோவையில் விஜய் மாநாடு ''நம்மூர்ல விஜய் கட்சிக்காரங்க இருக்காங்க; அவுங்க சத்தத்தையே காணோமே...'' ''அவுங்க நம்மூர்ல 'கப்சிப்'னு இருக்காங்க. மேலிடத்துல இருந்து சொல்ற உத்தரவை, யாருக்கும் பகிரக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்களாம். அ.தி.மு.க., ஸ்ட்ராங்க்கா இருக்கற நம்ம டிஸ்ட்ரிக்ட்டுல, மாநாடு நடத்தி, கெத்துக் காட்டுறதுக்கு 'பிளான்' வச்சிருக்காங்களாம். வருஷ கடைசியில, இல்லேன்னா, ஜனவரியில நடத்தலாம்னு நெனைக்கிறாங்க. 'ஜனநாயகன்' சினிமா ரிலீஸானதுக்கு அப்புறம் மாநாடு நடத்துனா, வெயிட்டா இருக்கும்னு கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க,'' 'கதர்சட்டை'யின் ஆசை ''மேட்டுப்பாளையம் தொகுதியை, காங்கிரஸ் கட்சிக்காரங்க கேக்குறதா ஒரு தகவல் ஓடிட்டு இருக்குதே உண்மையா...'' ''மித்து, அந்த தொகுதியில ஒன்பது தடவை, அ.தி.மு.க., ஜெயிச்சிருக்கு. ரெண்டே ரெண்டு தடவை தி.மு.க., ஜெயிச்சிருக்கு. நாலு தடவை காங்கிரஸ் ஜெயிச்சிருக்கு. அதனால, காங்கிரசுக்கு ஒதுக்கிட்டு, ஊட்டியை தி.மு.க., வச்சுக்கிடலாம்னு நினைக்குதாம்,'' - பேசியபடியே கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினாள் சித்ரா. குறைகேட்பு கூட்டம் நடந்த அரங்கை நோக்கி நடந்தாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி