தி.மு.க. - அ.தி.மு.க.வில் சீட் யாருக்கு?
'கா ய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு மித்து... சுக்கு காபி போட்டுத் தர்றியா?'' கேட்டவாறே வந்தாள் சித்ரா. ''கருப்பட்டி சேர்த்து போட்டுத் தர்றேங்க்கா... எலக்ஷன் பீவர் இப்பவே துவங்கிருச்சுப் பார்த்தீங்களாக்கா'' ''மித்து... சண்டே, சட்ட சபைத் தொகுதி வாரியா பா.ஜ. காரங்க ஆலோசனை நடத்தியிருக்காங்க... ''மாநில அளவுல ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்களோட வண்டவாளங்களை அண்ணாமலை உள்ளிட்டவங்க முன்வைக்கிற மாதிரி, லோக்கல்ல ஆளுங்கட்சிக் காரங்களோட மோசடி, தகிடுதத்தங்களையெல்லாம் வெளிக்கொண்டு வரணும்ன்னு கட்சிக்காரங்களுக்கு அட்வைஸ் பண்ணி யிருக்காங்க'' ''இதனால, இனி தி.மு.க.வுக்கு எதிரா பா.ஜ.வோட அஸ்திரம் பலமா இருக்கும்ன்னு சொல்றாங்க. ''எஸ்.ஐ.ஆர். கணக்கீடு முடிஞ்சவுடனே தி.மு.க.ல பூத் கமிட்டி கூட்டம், தெரு முனைக் கூட்டம்ன்னு பர பரக்க ஆரம்பிச்சுட்டாங்க... யாருக்கெல்லாம் சீட் கிடைக்கும்ங்கற பேச்சு இப்பவே அங்க ஓடுது... ''இப்ப இருக்கிற அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.எல்.ஏ. செல்வராஜ் இவங்களோட மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி மண்டலத்தலைவர் பத்மநாபன், இளைஞரணி தங்கராஜ் உட்பட பலரும் 'சீட்' கேட்டு மல்லுக்கட்டுறாங்க... ''ஆனா, உதயநிதி கடைக்கண் பார்வை விழுந்தாதான் சீட்டுங்கறதுனால சீனியருங்களுக்குக் கிடைக்குமாங்கற கேள்விக்குறியும் எழுந்திருக்கு'' யதார்த்தத்தைச் சொன்னாள் சித்ரா. காங்கிரஸ் ரகசியம் ''மித்து... மாவட்ட ஆபீஸ்லயே காங்கிரஸ்ல விருப்ப மனு வாங்க ஆரம்பிச்சுட்டாங்களாம்'' ''போன தடவை மாவட்டத்துல எந்த தொகுதிலயும் நிக்கவே இல்லையே... இப்ப எத்தனை தொகுதில நிக்கப்போறாங்களாம்க்கா...'' ''அதெல்லாம் ரகசியம் மித்து... சும்மா 'மாஸ்' காட்டலாம்ன்னு பண்றாங்களாம்'' ''அக்கா... அ.தி.மு.க.ல எக்ஸ் எம்.எல்.ஏ. குணசேகரனோட பிறந்த நாள்ல அன்னதானம், மருத்துவ முகாம்ன்னு 'துாள்' கிளப்பிட்டாங்க... ''குணசேகரன் காலமானப்ப, பொதுச்செயலாளர் இங்க வந்திருந்தாரு, குணசேகரனோட குடும்பத்தினர் கிட்ட, உங்களைக் கட்சி எப்பவும் கைவிடாதுன்னு வாக்குறுதி கொடுத்திருந்தாரு. ''குணசேகரனோட ஒய்ப் ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலரா இருந்தவங்க... மகனும், மகளும் மருத்துவ அணில இருக்காங்க... தெற்குத் தொகுதிய எய்ம் பண்றாங்க... ஆனா போட்டி கடுமையா இருக்கும்போல. ''வேலுமணி ஆதரவு இருக்கிறதால 'சீட்' கிடைச்சுடும்ங்கற நம்பிக்கைல இருக்காங்க... ''மித்து... 'நாசி-அவி' எம்.எல்.ஏ. தொகுதிப்பக்கம் வர்றதே இல்ல... கட்சிக் காரங்களோட சந்திப்பும் இல்ல. வயது மூப்பு, உடல்நலக்குறைவைக் காரணம் காட்றாங்க. ''வரக்கூடிய தேர்தல்ல மக்களை எதிர்கொள்றது சிரமம். அவிநாசி தொகுதிலதான் அன்னுாரும் இருக்கு... ''36 வருஷமா அன்னுாரைச் சேர்ந்தவங்களுக்கு வாய்ப்பு தரப்படறதில்ல... இந்தமுறை அன்னுார்காரங்க 'சீட்'டை விட்டுத்தரமாட்டாங்கன்ற பேச்சும் அடிபடுது'' ''சித்ராக்கா... அ.தி.மு.க. மாநகர் மாவட்டத்துல ஒவ்வொரு பூத்லயும் இறந்து நீக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்து நீக்கப்பட்டவர்கள், இதில் அ.தி.மு.க. - தி.மு.க. - த.வெ.க. ஆதரவு வாக்காளர், இரட்டை வாக்காளர் விவரங்கள பூத் வாரியா சமர்ப்பிக்கணும்ன்னு கட்சிக்காரங்களுக்கு மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உத்தரவிட்டிருக்காராம்'' ''மித்து... கட்சிக்காரங்க எந்தளவு விவரங்களை நுணுக்கமா தரப்போறாங்களோ... கட்சிக்காரங்க கொடுக்கறதை முழுமையா நம்பவும் முடியாதுல்ல... ''தே.மு.தி.க. தனி செல்வாக்கோட இருந்துச்சு... பார்லிமென்ட் தேர்தல்ல தி.மு.க.வையே மூனாவது இடத்துக்குத் தள்ள வச்சுது... விஜயகாந்த்ன்னா இங்க ஒரு அபிமானம் இருந்துச்சு... ''அதேபோல விஜய்க்கும் மாவட்டத்துல எலக்ஷன் கைகொடுக்கும். பிரதானக்கட்சிகளுக்கே 'டப்' கொடுக்கறது மட்டும் இல்ல... ஜெயிச்சும் காட்டுவோம்ன்னு நிர்வாகிகள் சொல்றாங்களாம்''. ''அக்கா... எல்லாத்தையும் பார்க்கத்தானே போறோம்'' கூலாகச் சொன்னாள் மித்ரா. பொதுநலத்தில் ஒரு சுயநலம் ''மித்து... எஸ்.ஐ.ஆர். கணக்கீடு முடிஞ்சுருச்சு... படிவங்கள் ஆன்லைன் பதிவேற்றத்துல ஏகப்பட்ட குளறுபடியாம். மாணவர்கள், தன்னார்வலர்கள் தான் இதில ஈடுபட்டாங்க... ஒரு படிவத்துக்கு ரெண்டு ரூபாய், டீ, சாப்பாடுன்னு கொடுத்தாங்க... 'குறிப்பா 2002ம் வருஷ விவரங்களைப் பதிவேத்தாம விட்டுட்டாங்களாம். திரும்பவும் அதை பி.எல்.ஓ.க்களே பதிவேத்த வேண்டியதா போச்சு... குறிப்பா, அவிநாசில தான் இது அதிகம்'' ''சித்ராக்கா... ஓட்டுப்பதிவு மெஷின் சரிபார்ப்பு பணில 'பெல்' ஊழியர்கள் ஈடுபட்டுட்டிருக்காங்க... வழக்கமா பத்திரிகையாளர் முன்னிலைல தான் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு சரிபார்ப்புப்பணி துவங்குமாம். ''ஆனா இந்த முறை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டாங்களாம். சரிபார்ப்புப்பணிக்கு தேர்தல் பார்வையாளர் வந்துட்டுப்போனது கூட, கட்சிக்காரங்களுக்குத் தெரியலையாம்'' ''மித்து... திருப்பூர் - அவிநாசி ரோட்டை ஒருவழிப்பாதையாக்க போலீஸ் ஆயத்தமாயிட்டிருக்காங்க...'' ''ஆமாக்கா... 'தோழர்' தரப்புல கடுமையா ஆட்சேபனை எழுந்திருக்கு... 'தோழர்'களோட அலுவலகம் அங்க இருக்கறதுனாலதான் குரலை ஓங்கி ஒலிச்சிருக்காங்க போல'' ''மித்து... பொதுநலத்துல சுயநலமும் இருக்கக்கூடாதா என்ன... ராம் நகர், பி.என். ரோடு பகுதில ஆக்கிரமிப்புகளை அகற்றுனாதான் இதெல்லாம் சாத்தியம். ரோடுகள் எல்லாம் மோசமா இருக்கு... ரோடு நல்லா இருந்தாதான் போக்குவரத்து மாற்றம் குறித்தே சிந்திக்கணும். ''இப்ப அ.தி.மு.க. வினரும் எதிர்ப்பு தெரிவிச்சி ருக்காங்க... சோதனை கூட சாத்தியமில்லாம போயிரும்போல...'' சித்ரா அங்கலாய்த்தாள். 'ஈ ஓட்டும்' டிரைவர் ''அக்கா... வெண்ணெய்க்குப் பிரபலமான ஊர்ல இருக்கிற ஸ்டேஷன்ல, ஒரு பெண் போலீஸ் உட்பட மூனு போலீஸ்காரங்களோட நடவடிக்கை கண்ணியக்குறைவா இருக்காம். ''உயரதிகாரி வரைக்கும் புகார் போனாலும், நடவடிக்கை எடுக்கப்படலையாம்'' ''மித்து... காளை ஊர்ல சூரிய டி.வி. நிருபர் ஒருத்தர், பார்காரங்க உட்பட பலதரப்புல இருந்து கல்லா கட்டிவந்தாராம். திடீர்ன்னு வருமானம் 'கட்'டாயிடுச்சாம். இதனால டீலுக்கு வராத போலீஸ்காரங்களைப் பத்தி, மொட்டை பெட்டிசன் போடுறத வழக்கமா வச்சிருக்காராம். ''சமீபத்துல பார் அடிதடி வழக்குல தாமரைக் கட்சி நிர்வாகிக்கு எதிரா செய்தி போட, பார் நடத்தியவர்ட்ட சில ஆயிரங்களைச் சுருட்டிட்டாராம். ''ஆனா பார்காரரே டி.வி.காரர்தான் இந்த ஐடியா கொடுத்தார்ன்னு தாமரைக்கட்சிக் காரங்ககிட்ட உண்மையைக் கக்கிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட கட்சிக்காரங்க, நிருபர் மேல காண்டா இருக்காங்களாம்'' ''அக்கா... அரிசிக்கடத்தல் முறைகேடுகளைக் கண்டு பிடிக்க பறக்கும் படை இருக்குது... ''அதுக்கு வழங்குன அரசு ஜீப்புக்கு நியமிக்கப்பட்ட டிரைவர் அந்த வாகனத்தை இயக்கறதில்லையாம். அவருக்குப் பதிலா இன்னொரு டிரைவரை தனது சொந்த ஏற்பாட்டுல அந்த அதிகாரி ஏற்பாடு செஞ்சுருக்காராம். ரெய்டப்ப அந்த டிரைவர்தான் வருவாராம். 'நிஜ' டிரைவர், ஆபீஸ்லயே 'ஈ ஓட்டிக்கிட்டு' இருக்கிறாராம். பாதுகாப்பான 'உணவு' துறைதான் போங்க...'' சித்ரா புன்னகைத்தாள். 'தப்பிய' டாக்டர் ''மித்து... அரையாண்டுத்தேர்வு துவங்குறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் மாவட்ட விளையாட்டுப்போட்டி நடந்திருக்கு... ''போதிய அவகாசம் இருந்தும், போட்டிகளை முடிக்கலையாம். போட்டியெல்லாம் போன மாசமே முடிஞ்சிருக்கணும். ''விசாரிச்சுப் பார்த்தா, 'கொஞ்சம் மிச்சம் இருந்துச்சு; மறந்துட்டோம்; எல்லாத்தையும் முடிச்சுத்தானே அறிக்கை கொடுக்க முடியும்'ன்னு கலாய்க்கிறாங்க'' ''அக்கா... மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் தலைமையில நடந்த ரெய்டுல, ஒரே வாரத்துல ரெண்டு போலி டாக்டர்கள் சிக்குனாங்க... ''ஆனா, இவங்க உடனடியா ஜாமீன்ல வந்துட்டாங்களாம். காரணம் என்னன்னு கேட்டா, அவங்க மேல பொதுமக்கள் தரப்புல யாரும் புகார் தரலையாம். இதனால கேஸ் நிக்காதுன்னு சொல்றாங்க'' ''மித்து... அப்ப போலி டாக்டர்களுக்கு குஷிதான்னு சொல்லு... தாராபுரம் ரோடு மருத்துவக் கல்லுாரி நுழைவாயில்ல இருந்து மருத்துவமனைக்குள் அதிவேகமா டாக்டர் ஒருத்தர் காரை ஓட்டிவந்திருக்காரு.... மோதினதுல கேன்டீன் ஊழியருக்குப் பலத்த காயம் ஏற்பட்ருச்சாம். ''டாக்டர் டீம் உடனடியா டிரீட்மென்ட் துவங்கி, 24 மணி நேரமும் கண்காணிச்சு, டிஸ்சார்ஜ் செஞ்சுருக்காங்க...'' ''சித்ராக்கா... சுகுமார் தம்பி வர்றேன்னு சொன்னான். வராம தப்பிச்சுட்டே இருக்கான் பாருங்க''' ''மித்து... மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க தினமும் வர்றாங்க. நுாத்துக்கும் மேற்பட்டவங்க உள்நோயாளிகளா அனுமதிக்கப்படறாங்க... ''இவங்களுக்கு ஹாட் வாட்டர் கிடைக்கறதில்லையாம். டீ ஸ்டால்ல இருபது ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்காம். ஹாட் வாட்டருக்கு ஏற்பாடு பண்ணனும்னு நோயாளிங்க கேக்கறாங்க'' பிரச்னையைப் பகிர்ந்தாள் சித்ரா. 'மதிப்பான' வரவேற்பு ''அக்கா... மாவட்டத்துக்கு சட்டசபை மதிப்பீட்டுக்குழு வந்துச்சுல்ல... தடபுடலா கலெக்டர் ஆபீஸ்ல வரவேற்பு கொடுத்தாங்களாம். கூட்ட அரங்கம், மேடை, சுவர்கள்ல மலர் அலங்காரம் ஜொலிச்சுதாம்'' ''மித்து... மதிப்பீட்டுக்குழுவுக்கு மதிப்பான வரவேற்புன்னு சொல்லு'' ''அக்கா... அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட்ல கட்டுன வணிக வளாக கடைகள் ஏலம் நடந்துச்சு... இதில ஆறு கடை மட்டும்தான் ஏலம் போச்சாம். ''ஒரு கடையை ஏலம் எடுத்தவர், டெபாசிட் மற்றும் ஏலத்தொகையைத் திரும்ப கேட்டாராம். நகராட்சி கூட்டத்துல முன்வச்சுத்தான் தீர்மானம் நிறைவேத்துனாங்களாம். இப்ப இன்னொருத்தரும், ரெண்டு கடைகளை வேணாம்ன்னு சொல்லி தொகையைத் திரும்ப கேக்குறாராம். ''நகராட்சி ஏல விதிமுறை படி பணத்தை திரும்பப் பெற முடியாதாம். ஆனா, நகராட்சி நிர்வாகம் எப்படி இதுக்கு மட்டும் சம்மதிக்குதுன்னு தெரியல... இதுல உள்குத்து இருக்குதோன்னு மக்கள் சந்தேகப்படறாங்க... எல்லாரும் ஏலம் எடுத்துட்டு இப்படியே பணத்தைத் திரும்பக்கேட்டா அது சாத்தியமாகுமான்னு சிலரு கேள்வி எழுப்பறாங்க... நியாயம்தானே'' ''மித்து... 'பல்...' நகர்ல, கூட்டுறவு சொசைட்டில சாதகமானவங்களுத்தான் லோன் தர்றாங்களாம். லோன் அமவுன்ட்டுக்கு தகுந்த மாதிரி கப்பமும் கட்டணுமாம். 'செந்தில்'தானாம் அங்க எல்லாமே'' ''அக்கா... பல்லடம் பக்கத்துல இச்சி கிராமத்துல கிணத்துல விழுந்த மாட்டை பயர் சர்வீஸ்காரங்க வந்து காப்பாத்தீட்டாங்க... சூரிய கட்சி நிர்வாகி, இதுக்காக ரெண்டாயிரம் செலவாச்சுன்னு சொல்லி பணத்தை ஆட்டையப் போட்டுட்டாராம்'' ''மித்து... டிவில சிவகுமார் படம் போடுறாங்க... பார்க்கலாமா?'' ''அக்கா... உங்களுக்கு 'பீவர்' சரியாயிருச்சுன்னு நினைக்கிறேன்... சுக்குக்காபி வேண்டாமா?''