உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / சூரிய கட்சியினர் கைகலப்பு; இலை கட்சியினர் மலைப்பு

சூரிய கட்சியினர் கைகலப்பு; இலை கட்சியினர் மலைப்பு

மூச்சிரைக்க சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''மித்து... பத்து மைல் 'வாக்கிங்' போன மாதிரி வர்ற...''''அதுக்கு எங்கக்கா நேரம்... நஞ்சப்பா ஸ்கூல் கிரவுண்ட்ல காலையிலும் மாலையிலும் நிறைய பேரு 'வாக்கிங்' போறாங்க... சிலரு, ஸ்டூடன்ட்ஸ் வர்ற வரைக்கும் கிரவுண்ட்டை விட்டுப் போறதில்லையாம். வாகனங்களை வேகமாகவும் இயக்குறாங்களாம்.''சொல்லிப்பார்த்தும் கேட்காததால, வாட்ஸாப் குரூப்ல ஸ்கூல் நிர்வாகம் சார்பில் பதிவு வெளியிட்டாங்களாம். இதனால கொஞ்சம் தீர்வு கிடைச்சிருக்கு... ஆனாலும், இன்னும் சிலர் ஸ்டூடன்ட்ஸ் வந்த பின்னாடியும் கிளம்ப மாட்டேங்கறாங்களாம்''''அவங்களை கிளாஸ்ல உக்காரவச்சா சரியா போயிடும்னு நினைக்கிறேன்''கலகலத்தாள் சித்ரா.

'சூரியக்கட்சி'யினர் திணறல்

''மித்து... நிர்வாகிகளுக்கு அவங்களோட பகுதில ஆயிரம் வாக்காளர் இருந்தா கட்டாயம் 300 பேரை புதிய உறுப்பினரா சேர்க்கணும்ன்னு சூரியக்கட்சி 'டாஸ்க்' கொடுத்திருக்கு.''சாப்ட்வேர்ல புதுசா சேர்ற நபரோட விவரங்களை 'அப்லோடு' பண்றதுக்கே 15 நிமிஷம் ஆகுதுன்னு சிட்டில கட்சிக்காரங்க சலிச்சுக்கறாங்களாம்.''ஒருத்தரைக் கட்சில இணைய வைக்க முயற்சி எடுத்து, விவரங்களை வாங்கி, 'அப்லோடு' பண்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுதாம்.''போனதடவை உட்கட்சித் தேர்தல்ல பதவிகளை அள்றதுக்காக நிர்வாகிகள் பலரும் தில்லுமுல்லு பண்ணுனாங்களாம். இந்த முறை தில்லாலங்கடிக்கு வாய்ப்பே இல்லையாம். நம்ம டிஸ்ட்ரிக்ட்ல சூரியக்கட்சிக்காரங்க என்ன பண்ணப்போறாங்கன்னு பார்க்கத்தானே போறோம்'''டயலாக்' பேசினாள் சித்ரா.''சித்ராக்கா... சூரியக்கட்சியோட ஆலோசனைக்கூட்டம், வேலம்பாளையத்துல நடந்துச்சாம். அப்போ ஒரு வார்டு செயலாளர் 'குட்டி', 'அங்கேரி' பகுதில குட்கா வித்துட்டு இருக்கிற ஆளையெல்லாம் கட்சில வச்சிருந்தா எப்படி வீடு வீடா ஓட்டு கேக்க முடியும்னு கேள்வி கேட்டாராம்.''பொறுப்பாளரான 'தங்கம்' டென்சனாயிட்டாராம். 'தங்கம்' -'குட்டி' இடையே கைகலப்பு ஆயிடுச்சாம். சிட்டி வி.ஐ.பி., தான் ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணுனாராம்.''கட்சி மேலிடத்துக்குப் புகார் பறக்கப்போகுதாம். நிர்வாகிகளோட 'குட்டி' ராஜினாமா பண் ணப்போறதா மிரட்றாராம்''''எல்லாம் நடக்கட்டும்... நடக்கட்டும்''புன்னகைத்தாள் மித்ரா.

'ஆபாச' அர்ச்சனை

''சித்ராக்கா... இன்னொரு சூரியக்கட்சி மேட்டர். தாராபுரம் பக்கத்துல, 'கொளத்து' பேரூராட்சி துணைத்தலைவரா இருக்கிறாராம் 'மீசை-சாமி', குடிநீர் பணியாளரை ஆபாச வார்த்தைகள்ல 'அர்ச்சனை' பண்ணுனாராம். ஆடியோ லீக் ஆயிருச்சு.''ஆடியோவை கட்சில இருக்கிற எதிர் குரூப் மேலிடத்துக்கு அனுப்பப்போறாங்களாம். ஆனா, 'தோழர்' கட்சியோ, 'சிறுத்தை' கட்சியோ இதுகுறித்து மூச்சே விடலையாம்...''''மீசை - சாமி மேட்டரு, எதிர்க்கட்சிக்காரங்களுக்கு வாயில மெல்லக் கிடைச்ச அவல்ன்னு சொல்லலாம்ல மித்து...''தலையசைத்தாள் மித்து.''மித்து... தெற்கு வி.ஐ.பி., இல்லத் திருமணம் சிறப்பா நடந்ததை கொண்டாடுற விதமா, பெருந்தொழுவுல பண்ணை வீட்டுல வச்சு தடபுடலா அசைவ விருந்து நடந்துச்சாம். உ.பா.,வும் தடையில்லாம கிடைச்சுதாம்.''மாவட்டப்பொறுப்புல இருக்கிறவங்கதான் விருந்துல கலந்துட்டாங்களாம். கீழ்மட்டப்பொறுப்புல இருக்கிறவங்க எங்களையும் கூப்பிட்டிருந்தா, உ.பா.,வோட விருந்தை 'ஒரு பிடி பிடிச்சிருப்பமே'ன்னு வருத்தப்படறாங்களாம்''மித்ரா சிரித்தாள்.

'பழுக்கும்' போலீஸ் பாக்கெட்

''சித்ராக்கா... சிட்டில தெற்கு பகுதியில சில போலீஸ் அதிகாரிங்க, சாப்பாடு, சொந்த வேலைக்குன்னு துட்டைக் கண்ணுல காட்டுறதே கிடையாதாம். இதனால, தங்களோட 'பாக்கெட் மனி' பறிபோகுது... அதிகாரிங்க ருசியா சாப் பிட ஓட்டல், ஓட்டலா ஏறி இறங்க வேண்டியிருக்குன்னு போலீஸ்காரங்க புலம்பறாங்க... இது கமிஷனர் காதுக்கும் போயிருச்சாம்...'''மித்து... சிட்டில இருக்கிற ஸ்டேஷன்கள்ல குற்றப்பிரிவுல போலீஸ் பற்றாக்குறை அதிகமாக இருக்கு... வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு உட்பட பல ஸ்டேஷன்கள்ல போலீஸ் எண்ணிக்கை சொற்பம். இதனால, இருக்கிறவங்க கூட, வேறு பிரிவுக்கு மாறணும்னு துடிக்கிறாங்க...''ஆதங்கத்துடன் சொன்னாள் சித்ரா.''சித்ராக்கா... கலெக்டர் ஆபீஸ் முன்னாடி, சமீபத்தில 'பொருள் வினியோகிக்கிற' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. இதுல கலந்துக்கிட்ட நிர்வாகிகள் சிலர், பல லட்சத்தைக் கொடுத்துதான் வேலைக்கே வரவேண்டிய நிலை இருக்குன்னு 'ஆதங்கத்தோட' பேசுனாங்களாம். இவ்ளோ ஓப்பனா பேசுறாங்களேன்னு, அங்கிருந்த போலீஸ் உள்ளிட்டவங்க 'ஷாக்' ஆயிட்டாங்களாம்''''மித்து... சிட்டில ஒரு இடத்துல இருக்கிற மதுக்கடையை அகற்றக்கூடாது; கடை இருந்தாதான் பாதுகாப்பா இருக்கும்ன்னு பெண்கள் மனு கொடுத்து அதிகாரிங்களுக்கு 'ஷாக்' கொடுத்தாங்கள்ல. பின்னணியை போலீஸ் விசாரிச்சப்ப, யார் ஆட்சிக்கு வந்தாலும், பார் நடத்துற நபர்தான் மனு கொடுக்க இவங்களை அழைச்சுட்டு வந்தார்னு தெரிஞ்சுதாம். மனு கொடுத்தவங்கள்ல, அ.தி.மு.க., பெண் நிர்வாகியும் இருந்தாங்களாம்னா பாத்துக்கோயேன்''புட்டுப்புட்டு வைத்தாள் சித்ரா.

மாணவிகள் 'ரிலாக்ஸ்'

''மித்து... 'இன்ஸ்டா' பதிவுனால, ரெண்டு ஸ்கூல் மாணவிங்க மோதிக்கிட்டாங்கள்ல. மோதலுக்கு மூளையா செயல்பட்ட மாநகராட்சி பள்ளி மாணவிகளோட பட்டியலை தயாரிச்சு மாவட்ட கல்வித்துறை அதிகாரிங்க, கவுன்சிலிங்குக்கு கூப்பிட்டிருக்காங்க... பெற்றோர், மாணவிகள் வந்திருக்காங்க... பெற்றோர்கள்ட்ட இனிமேல் மாணவிகள் இப்படி பண்ணுனா, 'டிசி கொடுத்துடுவோம்'னு சொல்லியிருக்காங்க...''இப்படி சொல்லிட்டிருக்கறப்பவே, மினிஸ்டர் மகேஷ், திருப்பூருக்கு வரப்போறாருங்கற தகவல் வந்திருக்கு... உடனடியா மாவட்ட கல்வி அதிகாரிகளோட கவனம் அங்க போயிடுச்சு... 'அப்பாடா... தப்பிச்சோம்'ன்னு மாணவிகள் 'ரிலாக்ஸா' பறந்துட்டாங்களாம்...''மாநில அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டத்துல மினிஸ்டர் கலந்துக்கிட்டாரு... '234 தொகுதிகளுக்கு சென்று கல்வி வளர்ச்சி பணிக்கு சளைக்காமல் ஆய்வுக்கூட்டங்களை தொடர்ந்து அமைச்சர் நடத்தி வருகிறார். சீரிய பணி பாராட்டத்தக்கது,'ன்னு 'முதன்மை' அதிகாரி, 'ஐஸ்' வச்சுப் பேசுனாராம்...''மாவட்ட கல்வி உதவி திட்ட அலுவலர் ஒருத்தர், சில தலைமை ஆசிரியர் பெயர்களை படிக்க, அவர்களோ, 'ஆட்சி சூப்பர்; காலை உணவுத்திட்டத்தால் குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டு, படிக்க வருகின்றனர். எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வித்திட்டத்தால், கல்வி முன்னேற்ற பாதையில் செல்கிறது,'ன்னு புகழ்ந்து தள்ளீட்டாங்களாம். மினிஸ்டரை குளிரவைக்கிறதுக்காக இப்படியெல்லாம இறங்கி வரணும்ன்னு சக ஆசிரியர்களே நகைக்கறாங்களாம்''சித்ரா வெளிப்படையாகப் பேசினாள்.''சித்ராக்கா... அ.தி.மு.க.,வுல பொதுச்செயலாளர் கூறிய விஷயங்களை, அப்படியே மாவட்ட செயலாளர், கட்சிக்காரங்ககிட்ட சொல்லிட்டாரு. வாக்காளரை சந்திச்சு எப்படி ஓட்டு சேகரிக்கறதுன்னு பயிற்சி கொடுக்கப் போறாங்களாம். வேறு மாவட்ட ஐ.டி., விங்க் நிர்வாகிங்க வந்து, 'பூத் கமிட்டி' நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுப்பாங்களாம்.நிர்வாகிகளுக்கு, 45 வயசுக்கு மேல் இருக்கக்கூடாதாம். ஒவ்வொரு 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் குரூப் போட்டோவும், கட்சி ஆபீசுல இருக்கணுமாம். மாவட்ட கட்சி ஆபீசில், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ், ஸ்கேனிங் மெஷின் கட்டாயமா இருக்கணுமாம்; இல்லைனா, உடனே வாங்கி வையுங்கன்னு ஆர்டர் போட்டிருக்காங்களாம்.''போடற கண்டிஷனை கேட்டு, நிர்வாகிகள் மலைச்சுப்போய்ட்டாங்களாம்''மித்ரா வியப்புடன் கேட்டாள்.

அலறிய பக்தர்கள்

''மித்து.. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வளாகத்துல பலா மரம் இருக்குது; பெரிய காய்கள் மரத்தில் காய்த்து குலுங்குது... மாணிக்கவாசகர் குருபூஜை நாள்ல, பெண்கள் பிரகாரத்தை சுத்திவந்தப்ப, மரத்தில் இருந்து, பலாப்பழம் ஒண்ணு உதிர்ந்து, உருண்டுவந்து அறிவிப்பு பலகை மீது பட்டு தரையில விழுந்திருச்சாம். பக்தர்கள் அலறி யடிச்சு ஓடுனாங்களாம். பக்தர்கள் பாதுகாப்பு விஷயத்துல ரொம்ப கவனமா இருந்தாகணும்''''சித்ராக்கா... மங்கலம், அணைப்பாளையம் நொய்யல் தடுப்பணை, ஆத்துல அதிக மீன் இருக்கு. விடுமுறை நாள்ல இளைஞர்கள் பலரும், இங்க மீன் பிடிக்கிறாங்க... அருகில் இருக்கிற மீன், சிக்கன் கடைக்காரங்க பெட்டி பெட்டியா கழிவுகளைக் கொண்டுவந்து ஆத்துல கொட்டுறாங்களாம்.''கேட்டா 'நாங்க ஆத்து மீனுக்கு தீனி போடறோம்'ன்னு சொல்றாங்களாம்... இளைஞர்கள் டென்சனாயிட்டாங்களாம்.''சாமளாபுரம் துவங்கி, மங்க லம் வரை, நொய்யலை துார்வாரி சுத்தம் செய்யணும்ன்னு சொல்லி, மங்கலம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்''''மித்து... பள்ளி, கல்லுாரிக்காக, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று கேட்டு அதிக விண்ணப்பம் குவியுதாம். சின்னச் சின்ன காரணங்களைச் சொல்லி வி.ஏ.ஓ.,க்கள் விண்ணப்பத்தை ரிஜெக்ட் பண்ணிடறாங்களாம். ஒரு போன் பண்ணி கேட்டா தெளிவாகிடும். ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தால் விண்ணப்பத்தை தள்ளுபடி செஞ்சா என்ன பண்றதுன்னு அப்பாவி மக்கள் புலம்புறாங்களாம்''சித்ரா கவலைப்பட்டாள்.

நொந்துபோன விவசாயிகள்

''சித்ராக்கா... புது கலெக்டர் பொறுப்பேற்றதால, கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்துக்கு ஏராளமான விவசாயிகள் வந்திருந்தாங்க... அரங்கத்துல கூட்டம் அலைமோதுச்சு..''விளைநிலத்துல எண்ணெய்க் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவிச்சு ஏராளமான விவசாயிகள் வந்திருந்தாங்க. கலெக்டர்ட்ட மனு கொடுத்துட்டு விவசாயிகள் வெளியேறிட்டே இருந்தாங்க... மேடையில இருந்த இன்னொரு பெரிய ஆபீசர், 'வெளியே போங்க...'ன்னு கையைக் காட்டி விரட்டுறது போல சைகை செஞ்சாராம். ஊழியர்கள், கூட்டரங்கு கதவை பாதியளவு மூடி வச்சாங்களாம். 'விவசாயிகளுக்கு இப்படியொரு அவமானம் நடந்ததே இல்லை'ன்னு நொந்துட்டே விவசாயிகள் வெளியே போனாங்களாம்''மித்ரா வருத்தத்துடன் சொன்னாள்.''மித்து... மாநகராட்சி குப்பை விவகாரம் எப்ப ஓயும்ன்னு தெரியல.. ஊத்துக்குளி தாலுகாவுல இருக்கிற கிராமத்துல இருக்குற பாறைக்குழில குப்பை கொட்டப்போனப்ப, எக்ஸ் மினிஸ்டர் தோப்பு வெங்கடாசலம் தடுத்துட்டாராம்.''தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.,ல இருக்காரு. சொந்தக்கட்சிக்காரரை சிட்டி வி.ஐ.பி., சமாதானம் செஞ்சிருக்கலாமேன்னு சொல்றாங்க... இப்படி இருக்கறப்ப எதிர்க்கிற பொதுமக்களை எப்படிச் சமாளிக்க முடியும்ன்னு பேசிக்கிறாங்க''''சித்ராக்கா... பேச்சு பேச்சாவே இருக்கட்டும்... சூடா மசாலா டீ கிடைக்குமா...''''மித்து இதோ, ஒரே நிமிஷத்துல கொண்டு வர்றேன்...''உரையாடல் வேறு திசைக்கு மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !