2027ல் 4 புதிய கார்கள், மஹிந்திராவின் திடீர் விஸ்வரூபம்
'மஹிந்திரா' நிறுவனம், 'நியூ - ஐ.க்யூ.,' என்ற உற்பத்தி தளத்தில் நான்கு புதிய முன்மாதிரி கார்களை காட்சிப் படுத்தி உள்ளது. 'விஷன் டி.எஸ்.எக்ஸ்., மற்றும் எஸ்.எக்ஸ்.டி.,' ஆகியவை ஆகும். அதாவது, நான்கு மீட்டருக்கு அதிகமான மற்றும் குறைந்த நீளத்தில், தலா இரு கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கார்களும், பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகிய மூன்று மாடல்களிலும் வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 'பிரண்ட் வீல்' மற்றும் 'ஆல் வீல் டிரைவ்' அமைப்பிலும் வருகின்றன. இந்த கார்கள், உள்நாட்டில் மட்டுமின்றி உலக சந்தைக்காகவும் உருவாக்கப்படுகிறது. இந்த உற்பத்தி தளத்தில், 3,990 முதல் 4,320 எம்.எம்., நீளம் உள்ள கார்களை உற்பத்தி செய்ய முடியும். வீல் பேஸ் பொதுவாக, 2,665 எம்.எம்.,மாக உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 176 முதல் 227 எம்.எம்., வரை வருகிறது. கார் நிலையாகவும், சவுகரியமாகவும் இருக்க, '5 - லிங்க்' ரியர் சஸ்பென்ஷனுடன் ஆக்டிவ் டாம்பர்கள் வசதி, 'வேரியபில் பிட்ச்' ஸ்டியரிங், பின்புற பயணியருக்கு வசதியான 'பிளாட் பிளோர்' அமைப்பு, 10.5 மீ., குறைந்த 'டர்னிங் ரேடியஸ்', 450 முதல் 644 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸ் உள்ளிட்டவை இத்தளத்தின் சிறப்பம்சங்கள். உலக அளவில் பல்வேறு கிராஷ் டெஸ்ட்களில், 5 - ஸ்டார்களை பெறும் வகையிலான குறைந்த எடை சேசிஸ் கட்டமைப்பும் வழங்கப்படுகிறது. 'தார்' எஸ்.யூ.வி., டிசைனில் 'விஷன் - டி' காரும், 'ஸ்கார்பியோ' எஸ்.யூ.வி., டிசைனில் 'விஷன் - எஸ்', காரும், 'எக்ஸ்.யூ.வி., 3.எக்ஸ்.ஒ.,' எஸ்.யூ.வி., டிசைனில் 'விஷன் - எக்ஸ்' காரும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 'விஷன் - எஸ்.எக்ஸ்.டி.,' தார் பிக் அப் டிரக் டிசைனில் வந்துள்ளது. இந்த கார்கள் அனைத்தும், 2027 முதல் ஒவ்வொன்றாக அறிமுகமாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.