உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டு கழிவு நீரால் குட்டையாக மாறிய காலிமனை; அஸ்திவாரம் அமைப்பதில் பொறியாளர் எச்சரிக்கை

வீட்டு கழிவு நீரால் குட்டையாக மாறிய காலிமனை; அஸ்திவாரம் அமைப்பதில் பொறியாளர் எச்சரிக்கை

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டினோம். மொட்டை மாடியில் சுண்ணாம்பு கலவை கொண்டு முக்காலுக்கு, முக்கால் 'டெரகோட்டா' ஓடுகளை பதித்தோம். இரண்டு ஆண்டுகளான நிலையில் இந்த களிமண் ஓடுகள், தளத்தில் இருந்து துாக்கிக்கொண்டு பிரிந்து வருகின்றன. எப்படி சரி செய்வது?-சுந்தரேசன், இருகூர்.மொட்டை மாடியில் அழுத்தம் மிக்க ஓடுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை தரமுடையவை அல்ல. அவற்றில் சரியாக வேகாத ஓடுகள், மழைநீரை உறிஞ்சி உடைகின்றன. உடைந்த ஓடுகளின் துாள்களை, அகற்றிவிட்டு சுத்தம் செய்ய வேண்டும். மேற்பரப்பில் நீர்தடுப்பு 'சீல்' கொண்டு இரண்டு பூச்சுக்கள் பூசி காயவிட வேண்டும். அதற்குமேல் சாதாரண மொசைக் டைல்ஸ் மற்றும் 'டைல் கிரவுட்' பயன்படுத்த வேண்டும். நீண்டகாலமாக பயன்படுத்தாத காலி மனையில், வீடு கட்ட துவங்கி இருக்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியேற்றிய கழிவு நீராலும், மழை நீராலும் மனை முழுவதும் குட்டையாக மாறிவிட்டது. இதன் பாதிப்பு, 10 அடி ஆழம் வரை மணல் நெகிழ்வாக இருக்கிறது. இதற்கு என்ன மாதிரியான அடித்தளம் அமைக்க வேண்டும்?-தமிழ், மேட்டுப்பாளையம்.தங்கள் காலிமனையின் கீழுள்ள அடி மண்ணின் வகையை, தெளிவாக தெரிவிக்கவில்லை. எதற்கும், தங்களின் மனையின் ஒரு மூலையில், 3 அல்லது 4 அங்குல விட்டமுடைய, 20 அடி ஆழம் வரை ஓர் உறைகிணற்றை அமையுங்கள். அதில் ஊறும் தண்ணீரை நான்கு நாட்களுக்கு இறைத்து வெளியேற்றுங்கள். அதன் பின்னர், காலிமனை முழுவதும் மூன்று அல்லது நான்கு அடி ஆழம் வரை மணலை வெட்டி எடுத்து அப்புறப்படுத்துங்கள். இந்த பள்ளத்தில் செஞ்சரளை மண் கலவையை போட்டு கெட்டிப்படுத்துங்கள். மண் சோதனை செய்து தொழில்நுட்ப அறிக்கை பெற்று, மிகச்சரியான அடித்தளத்தை தெரிவு செய்து, கட்டுமான வேலையை ஆரம்பியுங்கள். அரை கிரவுண்ட் மனையில், 1,600 சதுர அடியில் ஜி+1 வீடு கட்ட இருக்கிறேன். இந்த வீட்டுக்கு ஆர்.எம்.சி., கான்கிரீட் பயன்படுத்தலாமா? மிக சிறிய கட்டுமானங்களுக்கு ஆர்.எம்.சி., கான்கிரீட் உகந்ததா, அதன் தரம் நம்பகத்தன்மை மிக்கதா?- பிரபு, சிங்காநல்லுார்.வீடுகள் கட்டுவதற்கு எந்தவித தயக்கமும் இல்லாமல், முன் தயாரித்த ஆயத்த கான்கிரீட்டை(ஆர்.எம்.சி.,) பயன்படுத்தலாம். எல்லா நிறுவனங்களும் ஐ.எஸ்.ஐ.,(பி15) சான்றிதழ் பெற்று தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே ஆர்.எம்.சி., கான்கிரீட்டை தயாரிக்கின்றன. எனவே, ஒரு குறிப்பிட்ட பிராண்டை பரிந்துரை செய்வது தொழில் அறமன்று. ஆர்.எம்.சி.,யின் தரத்தை உறுதிசெய்ய, ஒவ்வொரு லாரி லோடில் இருந்தும், மாதிரி கான்கிரீட் எடுத்து சோதனை பெட்டிகளில் வார்த்து வைத்து, ஏழு நாட்கள் மற்றும், 28 நாட்கள் அமுக்கு தாங்கு வலிமையினை, பொறியியல் கல்லுாரிகளில் சோதனை செய்துகொள்ளலாம். அஸ்திவார பணிகள் செய்யும்போதே, சுற்று சுவருக்கான பணிகளையும் இன்ஜினியர் செய்துவருகிறார். அஸ்திவார பில்லர்களையும், கட்டடத்தின் பில்லர்களையும் தரைக்கு கீழே இணைத்திருக்கிறார். கேட்டால் சுற்றுச்சுவர் விழாமல் இருக்க கூடுதல் பலம் என்கிறார். இதெல்லாம் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பதாக தோன்றுகிறது. இது சரியான முறையா?- கதிரவன், சூலுார்.சமீபகாலமாக கட்டுமான துறையில், புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவர் கட்டுமான துறையில் நீண்ட அனுபவம் இல்லாதவர் என்றுதான் நினைக்கிறேன். சுற்றுச்சுவர் கட்டுபவர்கள், இரண்டு வகையான அஸ்திவாரம் அமைக்கும் முறையை தேர்வு செய்யலாம். ஒன்று பில்லர் குழிகளை அமைத்து, அவற்றை ஒரு பீம் வாயிலாக இணைப்பதன் வாயிலாக, சுற்று சுவரை இணைக்கலாம். அல்லது நமது பாரம்பரிய கட்டுமான முறையான அஸ்திவாரம் தோண்டி, அதற்கு சக்கை கல் போட்டு, அதன் பிறகு மேல்புறமாக செங்கல் அல்லது 'சாலிட் பிளாக்' வைத்து காம்பவுண்ட் சுவர் கட்டலாம். இந்த இரு முறைகளை தவிர, இப்போது சமீபத்தில் கட்டடத்தில் உள்ள பில்லரை இணைத்து பம் மட்டும் போட்டு, சுவர் கட்டுவது தவறான முறை. எனவே, கட்டுனர் இதுபோன்று அமைக்காமல் இருப்பது நல்லது. -மாரிமுத்துராஜ்உறுப்பினர்கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் (கொசினா).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sakthivel
செப் 20, 2025 11:13

சிறு சந்தேகம்... நாம் நம் வீட்டை சுற்றிலும் குறிப்பிட்ட அளவு (2' அடி) இடைவெளி விட்டு வீடு கட்டுகிறோம்... மேலும் இப்போதுள்ள புதிய வீட்டு மனைகள் அனைத்தம் சாலையில் இருந்து 1 அடி அல்லது 2' அடி பள்ளத்தில் உள்ளது... முதலில் நாம் வீடூ கட்ட ஆரம்பித்த பிறகு நீங்கள் கூறுவதை போல் காம்பவுன்டு சுவருக்கு தனியாக சிறு அஸ்திவாரம் மற்றும் பீம் போட்டு கட்டினால், நமது பக்கத்து வீட்டுகாரர் அவர் வீடூ கட்டும் கட்டும் போது நமது காம்பவுன்டை ஒட்டிதான் அஸ்திவாரத்திற்க்கு பள்ளம் தோண்டுகிறார்கள்... மனை நெடுகிளும் 7 பள்ளம் தோண்ட படுவதாக வைத்து கொள்வோம். பள்ளம் அளவு (5'x5') அப்போது நம் காம்பவுனண்ட் சுவர் ஒரு பக்கமாக சிறிது சாயவும் வாய்ப்பு இருக்கிறது... சிறிது சாய்ந்தும் விட்டது... இதற்கு பொறியாளரடம் கேட்ட பொழுது அவர் கூறிய பதில் காம்பவுன்ட் சுவரின் அஸ்திவாரம் மோலோட்டமாக இருக்கிறது என்றார்... ஆனால் வீட்டிற்கான அஸ்திவாரம் போடும் போதே காம்பவுன்டிற்கான காலம் கம்பிகளை சேர்த்தே போட்டுள்ளோம்... என்றேன்... எனது மனை சாலையில் இருந்து 2' இரண்டு அடி பள்ளத்தில் இருந்து.. மேலும் பேஸ்மனண்ட் உயரம் சாலையில் இருந்து 3 அடி மட்டுமே உயர்த்தி கட்டினேன்... மேலம் பேஸ்மண்டிலிருந்து 3' அடி மட்டுமே காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கட்டினேன்... மொத்த காம்பவுண்ட சுவர் உயரம் 8 அடி.. நடுவில் ஒரு டை பீமும் போட்டார்கள். இருந்கதாலும் சுவர் ஒரு பக்கம் சாய்ந்துள்ளது.. பொறியாளரிடம் கேட்கும் போது எட்டு அடி உயரத்தில் இருப்பதால் சுவரை பில்டிங் டை பீமுடன் இணைத்திருந்தால் இது வந்திருக்காது என்கிறார்... அல்லது பக்கத்து வீட்டுகாரரை இடைவெளி விட்டு கட்ட சொல்கிறார்... அவரிடம் கேட்டால் என் வீடு நான் அப்படி தான் கட்டுவேன் என்கிறார்கள்.... என்ன தீர்வு..? உடனே காம்பவுண்டு சுவரின் உயரத்தை குறையுங்கள் என்று கூறாதீர்கள்...


முக்கிய வீடியோ