பொது சாலையின் குறைந்தபட்ச அகலம் 7 மீட்டர்; ஆவணம் வாயிலாக உறுதிப்படுத்துவது அவசியம்
நிலத்தின் சர்வே எண்கள், ஊரின் பெயர், அனுமதி பெற்றவரின் பெயர் மற்றும் ஒவ்வொரு சைட்டின் எண், அளவுகள் ஆகியவை வரைபடத்தில் காணப்படும். அனைத்து விவரங்களும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான்.முக்கியமாக ஏற்கனவே இருந்த பொது சாலைகள், தற்போது ஏற்படுத்தப்பட்ட லே-அவுட் சாலைகள் மற்றும் அவைகளின் இணைப்பு விவரம் காணப்படும். லே-அவுட் அணுகுசாலை ஒரு பொது சாலையுடன், கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த பொது சாலையின் குறைந்தபட்ச அகலம், 7 மீ., இருக்க வேண்டும். இதனால் தடையற்ற பொது பாத்தியம் கொண்ட சாலை அமையும். ஆகவே, லே-அவுட் நுழைவாயிலில் இரும்பு கதவுகள் அமைத்து, 'கேட்டட் கம்யூனிட்டி' அல்லது காம்பவுண்டட் கம்யூனிட்டி அமைக்க வழி வகை இல்லை.பிற லே-அவுட் சாலைகளின் முடிவில், காம்பவுண்ட் சுவர் எழுப்பி அடுத்த நிலதாரருக்கு வழி மறுக்கலாகாது. அனைத்து சாலைகளும் பொதுவழியே. சாலையை தவிர்த்து, மீதமுள்ள லே-அவுட் பரப்பில் குறைந்தது, 10 சதவீதத்திற்கு பூங்கா திறவிடம் விடப்பட்டிருக்கும்.இதன்மீது, எந்த விதமான கட்டுமானமும் எழுப்ப அனுமதி இல்லை. ஆகவே, வீடு கட்ட இந்த நிலத்தின் எந்த பகுதியும் பொருந்தாது. இதேபோல், பிற பொது பயன்பாடு பிளாட்களையும் தவிர்த்து, எந்த பிளாட் வாங்குவது என முடிவெடுக்க வேண்டும்.பொது பயன்பாட்டுக்காக நீச்சல் குளம், கிளப், ஜிம் கட்டடம் போன்றவைகளுக்கு பிளாட் ஒதுக்கப்பட்டிருப்பின், வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக வரைபடத்தில் எந்த பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ, அதற்கு மட்டுமே அனுமதி உண்டு. வீடு கட்ட இந்த மாதிரியான பிளாட்களை தவிர்க்கலாம்.மேற்படி பொது வசதிகள் அமைத்து வழங்கப்படின், அவை பிளாட் வாங்குபவர்களுக்கு எவ்வாறு பாத்தியப்படும், பராமரிப்பு ஏற்பாடு விவரம் ஆகியவற்றை, ஆவணம் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.சங்கம் அமைத்து பராமரிக்கப்படுமெனில், சங்கத்திற்கு முறையாக ஒப்படைக்கப்படுமா, சங்க விதிகள், சங்க உறுப்பினராவது கட்டாயமா என அனைத்து விவரங்களையும், முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். பிளாட் விற்பனையில் பணம், யார் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்பதை, வழக்கறிஞர் கருத்து பெற்று நடக்க வேண்டும்.லே-அவுட் வரைபடம், அனுமதியில் உள்ளவரே தகுதியானவர் என்று கொள்ள வேண்டியதில்லை. எந்த தவறுக்கும், அரசு துறை பொறுப்பேற்பதில்லை என்கின்றனர் பொறியாளர்கள்.