அங்கீகாரமில்லாத மனைக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வரும்!
சொந்தமாக வீட்டு மனை வாங்க வேண்டும் என்று நினைக்கும் பலரும் அதன் அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகளை விற்பதற்கு அரசு தடை விதித்துள்ள போதிலும், சிலர் விபரம் தெரியாமல் அங்கீகாரமில்லாத மனைகளை வாங்குகின்றனர். குறிப்பாக, ஊரக பகுதிகளில் மொத்தமாக பணம் கொடுத்து மனை வாங்க முடியாத மக்கள் சில நிறுவனங்களில் தவணை முறை திட்டங்களில் மனை வாங்க இறங்குகின்றனர். இத்தகைய திட்டங்களில் அந்நிறுவனம் சொல்லும் தொகையை தவணையாக செலுத்தும் போது, மனையின் அங்கீகாரம் தொடர்பான கேள்விகளை எழுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. கொடுத்த பணத்துக்கு மனை கிடைத்தால் போதும் என்று அங்கீகாரம்இல்லாத மனையை, சென்ட் கணக்கில் குறிப்பிட்டு வாங்குகின்றனர். இதில் பெரும்பாலான மனைகள் அதற்கான கிரைய பத்திரத்தில் விவசாய நிலம் என்று தான் குறிப்பிடப்படுகின்றன. கட்டிய பணம் பறிபோகக் கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் இது போன்ற மனைகளை கேள்விகள் கேட்டாமல், சட்டப்பூர்வ விசாரணை மேற்கொள்ளாமல் வாங்குகின்றனர்.பத்திரப்பதிவு நல்லபடியாக முடிந்துவிட்டது, பட்டாவிலும் பெயர் மாறிவிட்டது இனி என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். பத்திரம், பட்டாவில் நம் பெயர் வந்துவிட்டது என்று இருக்கும் மக்கள் அந்த நிலத்தில் எதிர்காலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று பணிகளை துவக்கம் நிலையில் பல்வேற பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, அங்கீகாரம் இல்லாத மனையில் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பில் அனுமதி கோரி விண்ணப்பித்தால், வரன்முறை என்ற அடிப்படையில் சில லட்ச ரூபாயை கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். இது தவிர, மனை வரன்முறை திட்டத்தில் விண்ணப்பித்தால் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சரிகட்ட கூடுதல் தொகை தேவைப்படும். இது போன்ற சமயங்களில் வீடு கட்டுவது மட்டுமல்ல, அந்த மனையை விற்பதனாலும், அங்கீகாரம் இல்லை என்பதால் விலை மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அக்கம் பக்கத்து மனைகளைவிட உங்கள் மனையின் மதிப்பு, சில லட்சம் ரூபாய் குறைவாக குறிப்பிடப்படும் நிலை ஏற்படும். நமக்கு முன் ஒரு உரிமையாளர் வாங்கியிருக்கும் நிலையில், நமக்கு பிரச்னை வராது என்று நினைத்து அங்கீகாரமில்லாத மனைகளை மக்கள் வாங்குகின்றனர். ஆனால், உங்களுக்கு முந்தைய உரிமையாளர் நிலையில் வராத பிரச்னை நீங்கள் வாங்கும் நிலையில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து செயல்படுங்கள் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.