வீட்டின் பாதுகாப்பு இனி உள்ளங்கையில்! உறுதிப்படுத்துகிறது ஹோம் ஆட்டோமேஷன்
இன்று, 'ஹோம் ஆட்டோமேஷன்' மிக முக்கிய பங்கு வகிக்க தொடங்கி உள்ளது. 2010க்கு முன் ஹோம் ஆட்டோமேஷன் என்றால், ரூ.ஒரு கோடிக்கு மேல் கட்டப்படும் வீடுகளில் இருந்தது. தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வருகையால் விலை குறைவாகவும், பல்வேறு புதிய வசதிகள் உடையதாகவும், இவை மாறிவிட்டன. சுருங்கச் சொன்னால் வீடு முழுவதையும், மொபைல்போன் அல்லது ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக கட்டுப்படுத்த முடியும் என்கிறார், கோவை மண்டல கட்டுமான பொறியாளர்கள் சங்க (கொஜினா) முன்னாள் தலைவர் ஜெயவேல். அவர் மேலும் கூறியதாவது: வீட்டில் எலக்ட்ரிக்கல் பொருட்களின் கட்டுப்பாடு மட்டுமல்லாது, 'சிசிடிவி', மொபைல் அலாரம், வீட்டின் கேட் ஆகியவை ஹோம் ஆட்டோமேஷனின் ஓர் வடிவம். உங்களின் அனுமதியில்லாமல் யாரும் உங்கள் வீட்டினுள் நுழையும் முடியாது; எதையும் தொட முடியாது. உங்கள் வீட்டினுள் யாரேனும் புகுந்து, வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறக்க முற்படுவதற்குள், உங்களின் செல்போனுக்கு அலாரம் மற்றும் தகவல் வந்துவிடும். 'சிசிடிவி' கேமராவை பார்த்து திருட்டை தடுக்க முடியும். காவல்துறைக்கும் தகவல் கொடுக்க முடியும். தேவையில்லாத நபர்கள் நுழையும் பட்சத்தில் வீட்டின் அலாரத்தை ஒலிக்க வைத்து அவர்களை விரட்ட முடியும். இந்த வகை வீடுகளால் நமக்கு முதலில் பாதுகாப்பு கிடைக்கிறது. அதே சமயம், வீட்டில் உள்ள மின்னணு கருவிகளை உங்களையன்றி வேறு எவரும் இயக்க முடியாத பட்சத்தில், குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு இருக்கிறது. ஏசி, லைட், ஹீட்டர் தண்ணீர் மோட்டார் போன்ற மின் சாதனங்களை, இந்த ஆட்டோமேஷன் வாயிலாக கட்டுப்படுத்த முடியும். மின் வெட்டு ஏற்படுவதால், இந்த அமைப்புகளுக்கு பிரச்னையோ அல்லது அதனை இயக்குவதில் எந்த ஒரு தடங்கலோ இருக்காது. இதற்கு சாதாரண 'இன்வெர்ட்டர்' போதும். நமது கைவிரல் ரேகை, கருவிழி மட்டுமன்றி குரல் கட்டளையின் மூலமாகவும், இந்த மின்னணு கருவிகளை தொடாமலே இயக்க முடியும். ஹோம் ஆட்டோமேஷன் அமைப்புடன், நமது வீட்டை கட்ட முடிவு செய்துவிட்டால், ஆரம்ப கட்டத்திலேயே பொறியாளர்களிடமிருந்து அதற்கான வடிவமைப்புகளையும், பொருத்த வேண்டிய இடம் ஆகியவற்றையும் தேர்வு செய்து, வரைபடம் தயார் செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற செலவினங்கள் குறையும். உங்கள் வீட்டின் ஒவ்வொரு பாகத்தையும், ஒவ்வொரு அங்குலத்தையும், அசைவையும் கண்காணித்து குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுதான், இந்த 'ஹோம் ஆட்டோமேஷன்'. இவ்வாறு, அவர் கூறினார்.