தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம்!
''தகுதியுடைய திறமையான பொறியாளர் மற்றும் கட்டட வேலையாளர்களை தேர்ந்தெடுத்து, வேலை செய்ய வேண்டும்,'' என்கிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க பொறியாளர் பாபுராஜ்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:ஒரு கட்டடத்தின் ஆயுளுக்கு, அதன் தரமே முக்கிய அடிப்படை காரணியாக இருக்கிறது. கட்டடத்தின் தரத்தை பொறுத்தவரை, முக்கியமாக, நான்கு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலில், கட்டடம் கட்ட நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களும் முதல் தரமானவைதானா என்று பரிசோதித்து பயன்படுத்த வேண்டும். ஏதாவது ஒன்றில் சிறிது தரக்குறைவு இருந்தாலும், அது கட்டடத்தின் மற்ற பொருள்களையும் சேர்த்து வலுவழக்க செய்து விட வாய்ப்புண்டு. அடுத்து செய்யப்படும் வேலையின் தரம் மற்றும் அதன் கலை நுணுக்க வேலைப்பாடு ஆகும். என்னதான் முதல் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும், கட்டும் வேலை திறனில் தரக்குறைவு இருந்தால், அது முழு வேலையையும் பாதித்துவிடும். எனவே தகுதியுடைய திறமையான பொறியாளர் மற்றும் கட்டட வேலையாளர்களை தேர்ந்தெடுத்து, வேலை செய்ய வேண்டும்.மூன்றாவதாக நேஷனல் பில்டிங் கோட் (N. B. C) எனப்படும், தேசிய கட்டட குறியீடு - வரையறை செய்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, முறையாக கற்றறிந்த அனுபவமிக்க பொறியாளர்களின் துணையோடு கட்டடம் கட்டும் போது மட்டுமே, கட்டடத்தின் தரத்தையும், ஆயுளையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.கட்டடம் கட்டுவதற்கு உபயோகப்படுத்தும் பொருள்களின் கலவை அளவு மற்றும் செய்முறை கால அளவு என்ற இந்த இரண்டும், அதன் தரத்தை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கிறது. உதாரணமாக, சிமென்ட் உடன் மணல் மற்றும் ஜல்லியின் அளவை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் உபயோகப்படுத்தினால் மட்டும்தான், அதன் தரம், அந்த கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது. எந்த ஒரு நுகர் பொருளுக்கும் காலாவதி தேதி இருப்பதை போல, கட்டடம் கட்டும் போது உபயோகிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் காலாவதி மணித்துளிகள் (Expiry minute) என்று ஒரு கோட்பாடு வரையறை செய்யப்பட்டுள்ளது. அதை முறையாக, கவனமுடன் பின்பற்றினாலே போதும், ஒரு கட்டடத்தில் தரம் என்றும் நிரந்தரமாகும்.நமக்கு பின்பும் பல தலைமுறைகளை காணப்போகும் நமது கட்டடத்தை தரமாக, அழகாக, நீடித்து நிலைத்திருக்கும்படி அமைக்க வேண்டியதே, ஒவ்வொரு பொறியாளரின் குறிக்கோள் மற்றும் கடமை.இவ்வாறு, அவர் கூறினார்.