உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / அடித்தளம் அமைக்கும் பணியில் கவனமாக செயல்படுவது எப்படி?

அடித்தளம் அமைக்கும் பணியில் கவனமாக செயல்படுவது எப்படி?

வீடு கட்டும் போது அதில் பிரதானமானது, அஸ்திவாரம் அமைக்கும் பணி என்பதில் யாருக்கும், எந்த விதத்திலும் மாற்று கருத்து இருக்காது. இதனால், ஒவ்வொருகட்டடத்துக்கும் அஸ்தி வாரம் அமைப்பதில் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் வாங்கிய நிலத்தில் அஸ்திவாரம் அமைக்கும் முன் மண் பரிசோதனை செய்வது மிக மிக அவசியம் என்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மண் பரிசோதனைக்கு ஆகும் செலவை குறைக்கலாம் என்று அலட்சியம் காட்டினால், கட்டடத்தின் உறுதி பாதிக்கப்படும். கட்டட அமைப்பியல் பொறியாளர் குறித்து கொடுத்த அளவில் அஸ்திவாரத்துக்கு பள்ளம் தோண்டப்படுகிறதா என்பதை நேரடியாக ஆய்வு செய்யுங்கள். அதில், பள்ளம் எடுத்த இடத்தில் மண்ணின் தோற்றம் எப்படி உள்ளது, அதில் ஈரம் கசிந்து உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அஸ்திவார பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் அடுக்கின் குறுக்கு வெட்டு தோற்றம் எப்படி அமைந்துள்ளது என்று பாருங்கள். இதில் இயற்கையாக அமைந்த மண் அடுக்கு காணப்படுகிறதா அல்லது குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்பட்ட அடுக்குகள் தெரிகிறதா என்று பாருங்கள். சென்னை போன்ற நகரங்களில் விவசாய நிலங்கள் தான் புதிய மனைப்பிரிவுகளாக உருவாக்கப்படுகின்றன என்பதால், அதில் தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி நிரப்பப்பட்டு இருக்கும். இவ்வாறு கொட்டப்பட்ட மண் அடுக்கு எவ்வளவு ஆழம் வரை இருக்கிறது என்று பாருங்கள். அஸ்திவார பணிக்கான பள்ளத்தில், ஈரத்தன்மை எப்படி உள்ளது என்பதை கவனித்து பாருங்கள். பொதுவாக பள்ளம் தோண்டும் போது, மண் அடுக்குகளில் லேசான ஈரப்பதம் காணப்படுவது வழக்கம் தான் என்றாலும், அதில் பள்ளம் தோண்டிய ஒரு நாள் கழித்தும் ஈரப்பதம் தொடர்ந்தால், அது பிரச்னைக்கான அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நிலத்தில் இயற்கையாக காணப்படும் ஈரப்பதம், பள்ளம் தோண்டிய பின், சில மணி நேரங்கள் காய்ந்துவிடும். ஆனால், பள்ளம் தோண்டிய பின் ஒரு நாளைக்கு பின்னும் அங்கு ஈரப்பதம் காணப்பட்டால், அருகில் நிலம் சார்ந்த நீர்க்கசிவு இருக்கிறது என்பதை உணர வேண்டும். இது போன்ற நீர்க்கசிவு தெரியவந்த இடத்தில் கட்டடம் கட்டாம, திட்டத்தை கைவிட முடியுமா என்ன. இது குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர், கட்டுமான பொறியாளருடன் கலந்தாலோசித்து உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் அஸ்திவாரம் அமைக்க வேண்டும். இதற்காக பல்வேறு நவீன பாதுகாப்பு வழிமுறைகள் வந்துள்ளன. பொறியாளர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை