உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை /  பழைய கட்டடத்தை புதுப்பிப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 பழைய கட்டடத்தை புதுப்பிப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஒரு கட்டடம் கட்டப்படுகிறது என்றால், கான்கிரீட், கம்பிகள் திறன் அடிப்படையில் அதன் ஆயுள் காலம், 60 முதல், 70 ஆண்டுகள் என மதிப்பிடப்படுகின்றன. ஆனால், எதார்த்த நிலையில், முறையாக பராமரித்தாலும், 30 ஆண்டுகளை கடப்பதே பெரும்பாலான கட்டடங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில், 20 அல்லது, 30 ஆண்டுகளை கடந்த நிலையில் பெரும்பாலான கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். இதில் அடிப்படையாக என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஒரு கட்டடத்தை புதிதாக கட்டுவதற்கும், பழைய கட்டடத்தை புதுப்பிப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பழைய கட்டடத்தை சீரமைத்து புதிதாக மாற்றுவதில் பல்வேறு விஷயங்களை கூடுதலாக கவனிக்க வேண்டும். பழைய கட்டடத்தை சீரமைக்கும் பணிகளை துவங்கும் போது அந்த கட்டடம் என்ன முறையில் கட்டப்பட்டுள்ளது என்று பாருங்கள். பிரேம்டு ஸ்டிரக்ட்சர் முறையில் துாண்கள், பீம்கள் உள்ளதா என்று பாருங்கள். இவ்வகை கட்டடம் என்றால் முதலில் துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றின் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும். ஆனால், அந்த கட்டடம் லோடு பேரிங் முறையில் கட்டப்பட்டு இருந்தால், அதில் மேல் தள சுமையை தாங்கும் சுவர்கள் எந்த அளவுக்கு உறுதியுடன் இருக்கிறது என்று பாருங்கள். சில சமயங்களில் லோடு பேரிங் முறையில் கட்டப்பட்ட கட்டடத்தை புதுப்பிக்கும் போது, அதை பிரேம்டு ஸ்டிரக்ட்சர் முறைக்கு மாற்றலாமா என்ற எண்ணம் எழும். இப்படி மாற்றுவது என்றால், கட்டட அமைப்பியல் பொறியாளர், கட்டட வடிவமைப்பாளர், கட்டுமான பொறியாளர் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுவது அவசியம். இவ்வாறு கட்டடத்தை முழுதாக வேறு முறைக்கு மாற்றுவது, புதிய கட்டடம் கட்டுவதற்கு இணையான செலவை ஏற்படுத்தும். ஆனால், பழைய கட்டடத்தை அதன் அடிப்படை தன்மை மாறாமல் புதுப்பிக்கும் போது, துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றின் மேல் பூச்சு பகுதியை சீரமைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சுவர்களில் காணப்படும் உடைப்புகளை சரி செய்து புதிய பூச்சு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நீர்க்கசிவு தடுப்புக்கான வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயணங்களை பயன்படுத்தலாம். இத்துடன், மேல் தளத்தின் வெளிப்புற பகுதியில் பதிக்கப்பட்ட சொருகு ஓடுகளை அப்புறப்படுத்தி புதிய கற்களை அமைக்க வேண்டும். மேல் தளத்தில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பு இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். இத்துடன் நீர்க்கசிவு தடுப்பு பணிகளை முடித்தபின் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள். பழைய கட்டடத்தை அதன் அடிப்படை தன்மை மாறாமல் புதுப்பிக்கும் போது, துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகியவற்றின் மேல் பூச்சு பகுதியை சீரமைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி