உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை /  கையெழுத்து போட்ட பத்திரத்தை பதிய காலகெடு என்ன?

 கையெழுத்து போட்ட பத்திரத்தை பதிய காலகெடு என்ன?

இன்றைய சூழலில் சொத்து வாங்க வேண்டும் என்பதில், அதை தேர்வு செய்வது போன்று குறிப்பிட்ட காலத்தில் பதிவு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த இடத்தில், எந்த நிலையில் உள்ள சொத்தை வாங்குவது என்பதில் தெளிவாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இதில் சொத்தின் உரி மையாளர் யார் என்பதில் துவங்கி, அதில் வில்லங்கம் எதுவும் உள்ளதா என்று பார்த்து முடிவுகளை எடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் முடிவு செய்த நிலையில், உங்கள் பெயரில் சொத்தை பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு சொத்தை வாங்கும் போது, முன்பணம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வது வழக்கம். இதன்படி தயாரிக்கப்படும் விற்பனை ஒப்பந்த ஆவணத்தை பதிவு செய்வது, இரண்டு தரப்புக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பை கொடுக்கும். இதற்கு அடுத்தபடியாக சொத்து பரிமாற்றத்துக்கான கிரையப்பத்திரம் எழுதுவதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சொத்தை வாங்குவோர் இதற்கான பணிகளில் எவ்வித பிழையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றுவதற்கான கிரையப்பத்திரம் எழுதும்போது அதில் தேதி உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். அந்த ஆவணத்தை தாக்கல் செய்யும் முன்பே, சொத்தின் உரிமையாளர், வாங்குபவர், சாட்சிகள் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். இந்த வேலைகள் அனைத்தும் சரியாக முடிக்கப்பட்ட நிலையில், பத்திரத்தை பதிவு செய்ய நாள் குறித்து டோக்கன் பெற்று இருப்பீர்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் நேரில் ஆஜராக முடியாமல் போகலாம். சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை காரணமாக அந்த குறிப்பிட்ட நாளில் பத்திரத்தை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற சூழலில், ஒரு குறிப்பிட்ட தேதியுடன் தயாரிக்கப்பட்ட பத்திரத்தை பதிவு செய்ய முடியாதது பதற்றத்தை ஏற்படுத்தும். இது போன்ற சூழல் ஏற்பட்டால் சொத்து வாங்குவோர் பதற்றம் அடைய வேண்டாம். ஒரு குறிப்பிட்ட தேதியிட்ட பத்திரத்தை, நான்கு மாதங்களுக்குள் பதிவுக்கு தாக்கல் செய்யலாம். அந்த நான்கு மாத அவகாசம் கடந்த நிலையில், மாவட்ட பதிவாளரிடம் முறையிட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்தி பதிவு செய்யலாம். குறிப்பிட்ட நாளில் பதிவு செய்ய முடியாமல் போனால், வேறு ஒரு நல்ல நாளில் அதே பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வழிமுறைகள் உள்ளன. பதிவு சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள இந்த வழிகளை பொது மக்கள் பயன்படுத்தலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள். பத்திரத்தை பதிவு செய்ய நாள் குறித்து டோக்கன் பெற்று இருப்பீர்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் நேரில் ஆஜராக முடியாமல் போனால் பதற்றம் அடைய வேண்டாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை