உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / வீடு பராமரிப்பு / மழைக்காலத்திற்கு முன்பு வீட்டு பராமரிப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே!

மழைக்காலத்திற்கு முன்பு வீட்டு பராமரிப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே!

பல லட்ச ரூபாய் போட்டு கட்டிய அல்லது வாங்கிய வீட்டினை பருவமழைக்கு தயார்படுத்தவில்லை என்றால் ஒரே அடியாக செலவு வைத்துவிடும். மழைக்காலத்தில் தொடர்ந்து நீர் சொட்டுவதால் வீடுகளின் வெளிப்புறச் சுவர்கள், கூரைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அவை மட்டுமின்றி கதவு, ஜன்னல்கள், மரச்சாமான்களும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படலாம். என்னென்ன விஷயங்களை மழைக்காலத்திற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டும் என பார்க்கலாம்.

சுவர்கள், கூரைகளுக்கு வாட்டர் ப்ரூப் பெயிண்ட்!

வீட்டின் சுவர்கள் மற்றும் கூரையில் விரிசல்கள், பிளவுகள் உள்ளதா என பாருங்கள். எதனால் அது ஏற்பட்டது என கண்டறியுங்கள். சில விரிசல்கள் பூச்சு வேலை குறைபாட்டால் ஏற்பட்டிருக்கும். சில பிளவுகள் வீட்டினுள் எங்கேனும் நீர் கசிவால் ஏற்பட்டிருக்கும். 20 எம்.எம்., வரைக்குமான விரிசல்களை அடைக்கும் நவீன் தொழில்நுட்பத்துடன் கூடிய மாவுகள் உள்ளன. அவற்றை கொண்டு விரிசல்களை அடைத்து, வாட்டர் ப்ரூப் தன்மைத் தரும் எலஸ்டோமெரிக் மற்றும் அக்ரிலிக் பாலிமர்கள், பாலியஸ்டர் பைபர்கள் கொண்ட பெயிண்ட் வாங்கி இரண்டு கோட்டிங் அடிக்க வேண்டும். இதன் மூலம் நீர் கசிவு சுவரையோ, காலம் கம்பிகளையோ தாக்காது. அதே போல் ரூபிலும் டேம்ப் ப்ரூப் பெயிண்ட்களை அடிக்கலாம்.

குழாய்களை சரி பார்க்கவும்

மழைக்காலத்தில் வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, வடிகால் மற்றும் மழைநீர் குழாய்களில் குப்பைகளின்றி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிப்புற மற்றும் உட்புற குழாய்களில் விரிசல் மற்றும் கசிவுகள் உள்ளதா என சரிபார்க்கவும். மழை சமயத்தில் பிளம்பரை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். முன்னரே இதை எல்லாம் சரி செய்துகொள்ளுங்கள்.

கதவுகள், ஜன்னல்களுக்கு மராமத்துப் பணி!

மராமத்து என்றால் பராமரிப்பதைக் குறிக்கும். மரக் கதவு, ஜன்னல்களை குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பது அவசியம். சில வகையான மரக் கதவுகள், ஜன்னல்கள் வெயிலில் சுருங்கும், மழைக்காலத்தில் விரிவடையும். அவற்றை ஈரப்பதம் தாக்காத வகையில் பிரைமர் மற்றும் எனாமல் பெயிண்ட் அடித்து வையுங்கள். மழை நாட்களில் பால்கனி கதவுகளின் கீழ் ரப்பர் கேஸ்கட்களை செருகி வையுங்கள். மழைச் சாரல் உள்ளே வராமல் இருக்கும். கண்ணாடி ஜன்னல் என்றால் மழைக்காலத்தில் போம் சீலண்ட் கொண்டு இடைவெளிகளை நிரப்பலாம்.

வயரிங்கை சரிபார்க்கவும்

உங்கள் வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகிறது என்றால் மின் வயரில் ஏதேனும் பழுது இருக்கிறதா என எலெக்ட்ரீஷியனை அழைத்து வந்து சரி பார்த்துவிடுங்கள். சுவிட்ச் போர்டுகள், காலிங் பெல், மோட்டார் சுவிட்ச், ப்ளக் பாயிண்ட்கள் ஆகியவை தண்ணீருடன் தொடர்பு இல்லாதவாறு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !