ஒரு ஊர்ல ஒரு பாட்டி!
உழைத்து ஓய்ந்த பின்தான் இவருக்கான வாழ்க்கையை காலம் அடையாளம் காட்டியிருக்கிறது!மூத்தோர் தடகளத்தில் சாதித்து வரும் கோவை, உப்பிலிபாளையம் 75 வயது லட்சுமி சண்முகம் பாட்டியின் பேச்சில் எந்த தடுமாற்றமும் இல்லை!சாதனைக்கு ஏன் பாட்டி இவ்வளவு தாமதம்?என்னாட 12 வயசுல அப்பா இறந்துட்டார். மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தாச்சு! எனக்கு அப்புறம் நாலு பேர்; படிப்பை கைவிட்டு 50 பைசா கூலிக்கு காட்டு வேலைக்குப் போனேன்; கட்டட வேலையில மணலும் செங்கலும் சுமந்தேன்; வீட்டு வேலையும் பார்த்தேன்; நாலு பேரையும் கரையேத்தி முடிக்கும்போது எனக்கு 27 வயசு!1970களில் 27 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல்...'குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறம் தான் திருமணம் பற்றி முடிவெடுக்கணும்'னு எனக்கு வைராக்கியம்! இப்பவே கல்யாண வயசைத் தாண்டி வாழ்ற ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பேசுறாங்க... அந்தகாலத்துல கேட்கவா வேணும்; திருமண வாழ்க்கை மேல எனக்கு வெறுப்பே வந்திருச்சு!காலம் கடந்ததால் இவரது வீட்டில் அழுத்தம். விருப்பமில்லாமல் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருக்கிறார். திருமணம் வரை மாப்பிள்ளையின் முகம் பார்க்கவில்லை; அவர் வயது தெரியாது. ஆனாலும், மனதை மாற்றிக் கொண்டு இஷ்டப்பட்டு வாழ்ந்திருக்கிறார் பாட்டி. நல்லறமான இல்லறத்தில் இரண்டு ஆண், ஒரு பெண் பிள்ளைகள்!'தடகளம்' - துாண்டியது யார்?அம்மாவோட இறப்புனால பெரும் மனஅழுத்தம்! 2008ம் ஆண்டு கோவையில மூத்தோருக்கான தடகளப் போட்டி நடந்தது. என் மனசுக்கு ஒரு மாற்றம் தேவையா இருந்தது. போட்டியில கலந்துக்கிட்டேன். 'குண்டு எறிதல்ல தங்கம், 800 மீட்டர் ஓட்டத்துல வெள்ளி, ஈட்டி எறிதல்ல வெண்கலம்'னு முதல் முயற்சியிலேயே மூணு பரிசுகள்!தாயின் இறப்பைத் தொடர்ந்து, 2010 ஏப்ரல் மாதம் பாட்டியின் கணவர் சண்முகம் மறைவு; செப்டம்பர் மாதம் மூத்த மகன் மறைவு; தொடர் இழப்புகள் தந்த சோகங்களை மறக்க லட்சுமி பாட்டிக்கு துணையாக இருந்தவை இப்போட்டிகளும் அதன் வெற்றி தோல்விகளுமே! இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 14 தங்கம், 27 வெள்ளி, 18 வெண்கல பதக்கங்கள் குவித்திருக்கிறார். உங்க ஆரோக்கிய ரகசியம் என்ன பாட்டி?அதிகாலை 5:00 மணிக்கு எழுந்திருக்கிறேன். வெந்நீர் குடிச்சுட்டு சூரிய வெளிச்சம் படுற வரைக்கும் உடற்பயிற்சி பண்றேன். ரேஷன் அரிசியும் கோதுமையும் சாப்பிடுறேன். இப்போவரைக்கும் எந்த நோயும் இல்லை; பார்வையிலேயும் பழுதில்லை.பாட்டி சொல்லை தட்டாதே!முகம் பார்த்து பேசினா எந்த பிரச்னையும் தீர்ந்திடும்; உறவுகள்கிட்டே பேசாம மட்டும் இருக்காதீங்க!