உள்ளூர் செய்திகள்

நங்கையர் திலகம்

'எறும்பு ஊர கல்லும் தேயும்' என்பது பலருக்கு நடைமுறைப்படுத்தும் செயல்; சிலருக்கு நெடிய தவம். பிறவியிலேயே 'டவுன் சிண்ட்ரோம்' தாக்கமுள்ள மகன் சந்திரமவுலிக்காக, கடந்த 38 ஆண்டுகளாக அத்தகைய தவத்தை மேற்கொண்டு வருகிறார் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பாலா ரகுநாதன்.தவம் கற்பித்த படிப்பினைகள்?மவுலி ஒரு சிறப்பு குழந்தைன்னு தெரிய வந்ததும், 'நாம ஏதோ பாவம் பண்ணியிருக்கோம். அதனாலதான், கடவுள் நமக்கு இப்படியொரு குழந்தையை கொடுத்திருக்கார்'னு நினைச்சேன். 'இனி வாழ்க்கை முழுக்க சிரிப்பே கிடையாது; சோகம் மட்டும்தான்'ங்கிறது அப்போ என் எண்ணம். ஆனா இதெல்லாம், 'டவுன் சிண்ட்ரோம்'ங்கிறது ஒருவித நோய்னு தப்பா புரிஞ்சிருந்த நேரத்துலதான்; எப்போ அது நோய் இல்லை...ஒருவித தன்மைன்னு புரிய ஆரம்பிச்சதோ, அந்த நிமிஷத்துல இருந்து மவுலிதான் உலகம்னு ஆயிடுச்சு! மவுலியிடம் உங்கள் தவம் ஏற்படுத்திய மாற்றங்கள்?என் மவுலிக்கு நல்லா சமைக்கத் தெரியும்; மிருதங்கம் வாசிக்கத் தெரியும்; வேத மந்திரங்களை மனப்பாடமா சொல்லத் தெரியும்; மருத்துவமனையின் நிர்வாக கோப்புகளை முறையா பராமரிச்சு கையாளத் தெரியும்... என்ன பார்க்குறீங்க... கடந்த 20 ஆண்டுகாலமா, சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில தன்னார்வலரா பணியாற்றிட்டு இருக்குறான். இப்படி... சின்ன சின்னதா அவனுக்குள்ளே நிறைய மாற்றங்கள்! அப்போ, உங்க தவம் முழுமை அடைஞ்சாச்சு... இல்லையா?மவுலியை பராமரிக்கிறதுக்கான சிறப்பு கல்வியை என்னோட 35 வயசுல கத்துக்கிட்டேன்; 46 வயசுல மவுலியோடு சேர்ந்து நானும் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில டிப்ளமா முடிச்சேன்; அவனோட சேர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்பை 58 வயசுல படிச்சேன்; சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச கருத்தரங்குல என்னோட 62 வயசுல பேசினேன். இப்போ எனக்கு 64 வயசு... மவுலிக்காக எதையாவது இப்பவும் புதுசு புதுசா கத்துக்கிட்டேதான் இருக்குறேன். இந்த தவம் என் மொத்த வாழ்நாளுக்குமானது.எதிர்காலம்?இன்னைக்கு மவுலிக்கு நானும் என் கணவரும் இருக்கோம். ஆனா நாளைக்கு யார்னு கேட்டா பதில் இல்லை. எங்ககிட்டே மட்டுமில்ல... சிறப்பு குழந்தைகளோட எதிர்காலம் பற்றிய கேள்விக்கு எந்த பெற்றோர்கிட்டேயும் பதில் இருக்காது. வெளிநாடுகள்ல, சிறப்பு குழந்தைகளுக்கு நிதி உதவியோட அரசே குடியிருப்புகள் அமைச்சு தருது. நம்ம நாட்டுல அப்படியான நிலை வர்றப்போதான் என்னை மாதிரியான தாய்மார்களுக்கு நிம்மதியான துாக்கம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !