பெண்மை என் பெருமை
'வலியை உணர்ந்தவருக்குத்தான் அதன் வீரியம் தெரியும்; தன்னைப்போலவே துடிப்பவரின் உணர்வுகள் புரியும்' எனும் உண்மையை பொய் ஆக்குபவர் ஜெயஸ்ரீ ரத்தன். இவர் இவ்வலி உணர்தவரில்லை; ஆனால், மற்றவர்களின் வலி உணர்பவர்!உணராது உணர்ந்த வலி என்ன?புற்று நோயாளிகளோட வாழ்க்கை கொடுமையானது; ஆனா, மார்பக புற்றால பாதிக்கப்பட்டிருக்கிற பெண்கள் அளவுக்கு நரகம் கிடையாது. 'மார்பகம் இல்லாத என் உடலை ஏத்துக்க எனக்கே இரண்டு ஆண்டுகள் ஆச்சு; மார்பகத்தை அழகிற்கான தகுதியா பார்க்குற இந்த சமூகத்தால எப்படி எளிதா கடந்து போக முடியும்?'னு என்கிட்டே கேட்ட ஒரு பெண்ணோட வலியை என்னால இன்னும் உணர முடியுது. இந்த பிரச்னையை கடக்கத்தான் செயற்கை மார்பகம் இருக்குதே?இருக்கு; வசதியானவர்கள் மட்டும் வாங்கி பயன்படுத்துற விலையில இருக்கு; ஏழை பெண்களுக்கு இது சாத்தியமா என்ன!பூர்வீகம் சென்னையாக இருந்தாலும், 68 வயது கு.ஜெயஸ்ரீ தற்போது வசிப்பது மஹாராஷ்டிராவின் மும்பையில். கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். 'மூத்த மகன் எங்ககூடத்தான் இருக்குறான். இளையவன் அமெரிக்காவுல இருக்குறான். அவனைப் பார்க்க அடிக்கடி பறந்திடுவேன்' என்பவருக்கு, 'நிட்டட் நாக்கர்ஸ்' எனும் 'பின்னல் மார்பகங்கள்' அறிமுகமானது அமெரிக்காவில்! 'பெண்களுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கிறதை என்னால அப்போதான் உணர முடிஞ்சது. என் உறவுக்கார பெண்ணும் புற்றுநோயால மார்பகத்தை இழந்திருந்தாங்க. இந்தியா திரும்பினதும், 'நான் பின்னித் தந்தா பயன்படுத்துவீங்களா'ன்னு கேட்டேன்; தயக்கத்தோட சம்மதிச்சாங்க. இன்னைக்கு என்னால 1,800க்கும் அதிகமான பெண்கள் மகிழ்ச்சியா இருக்குறாங்க. பணம் வாங்காம நான் செய்ற இந்த சேவையும், பலன் அடைஞ்சவங்களோட வாழ்த்தும் என் பெண்மையை ரொம்பவே பெருமையா உணர வைக்குது!பெண்களை சதைப் பிண்டமா அணுகுற இந்த சமூகத்தை இப்படி ஜெயிச்சாகணுமா? நியாயமான கேள்வி; ஆனா, இந்த சூழல் மாற பெண்கள் வெளி உலகத்துக்கு பழக்கப்படணுமே! 'நான் வீட்டை விட்டு வெளியே வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல ஆகுது'ன்னு சொல்ற பெண்கள்கிட்டே போராட்ட எண்ணத்தை விதைக்க முடியாது; ஆனா, அவங்க தாழ்வு மனப்பான்மையை உடைக்கலாம்; இதன் மூலமா, போராடுற குணம் தானா வெளியே வரும். நான் தயாரிக்கிற 'நிட்டட் நாக்கர்ஸ்' இதைத்தான் செய்யுதுன்னு நம்புறேன். கடந்த 2018ம் ஆண்டு ஜெயஸ்ரீ விதைத்த விதை இது. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 230க்கும் அதிகமான பெண்கள் இவரைப் போலவே சேவை செய்து வருகின்றனர். பரவட்டும்... மனிதம்....ஜெயஸ்ரீயின் புதுப்புது அர்த்தங்கள்*அன்பு - உண்மை*பெண் - மருந்து*பணம் - அலை