பெண்மை என் பெருமை
சங்ககால காப்பியமான மணிமேக லையில், ஆபுத்திரனை பெற்றெ டுத்து வனத்தில் கைவிட்டுச் செல்கிறாள் அவன் தாய். குழந்தை அழும் சத்தம் கேட்டு அவ்விடம் வரும் பசு, ஆபுத்திரன் மீது பால் சுரந்து பசி யாற்றுவதாக ஒரு நிகழ்வு!இன்று... தாய்ப்பால் கிடைக்காத எத்தனையோ 'ஆபுத்திரன்'களுக்கு, தாய்ப்பாலை தானமாக வழங்கி வரும் சில அன்னையர்களில் தேனியின் 26 வயது காயத்ரி சீனிவாசனும் ஒருவர்; இவர், முன்னாள் உயிரியல் ஆசிரியை!தாய்ப்பால் தானத்துக்கு மனசு எப்படி தயாராச்சு?இதை குடும்பம் ஏத்துக்குமா; நம்ம குழந்தைக்கு பால் இல்லாம போயிட்டா என்ன பண்றதுன்னு மனசுல பெரும் போராட்டமே நடந்தது! 'உடல் சார்ந்து முடிவெடுக்கிறது அவரவர் உரிமை'ங்கிற தெளிவு கிடைக்க அனுபவமும் துணிச்சலும் எனக்குத் தேவையா இருந்தது. இந்த இரண்டும் கிடைச்சதுமே குடும்ப ஆதரவும் கிடைச்சிருச்சு!தன் நான்கு மாத குழந்தைக்கு கொடுத்தது போக மீதமாகும் தாய்ப்பாலை, 'தாய்ப்பால் குழு' மூலமாக தேனி அரசு மருத்துவமனை 'தாய்ப்பால் வங்கி'க்கு கடந்த சில மாதங்களாக வழங்கி வருகிறார் காயத்ரி.'தாய்ப்பால் தானம்' - அவசியம் என்ன?தீவிர சிகிச்சை பிரிவுல உள்ள பச்சிளம் குழந்தைகளைப் பார்த்த கணம், என் குழந்தையோட பாதுகாப்பான வாழ்க்கை சூழல் எனக்குப் புரிஞ்சது. 2 லிட்டர் தாய்ப்பால் 10 குழந்தைகளுக்கான ஒரு வேளை உணவு; இதுக்கே பெரும் பற்றாக்குறை இருக்குறதால பால் பவுடர் வைச்சு சமாளிக்கிறாங்க! 'தாய்ப்பால் தானம்' பற்றிய விழிப்புணர்வு இல்லாததால இம்மாதிரியான பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படுறது பெரிய அவலம்!இதுதான் பிரதான பிரச்னையா?'தாய்ப்பால் தானத்துக்காக 'பம்ப்' பயன்படுத்தினா மார்பகம் சிதையும்; பால் சுரக்குறது வற்றிப் போயிடும்; இளமை போயிடும்'னு பெண் உடல் பற்றி நிறைய பிம்பங்கள் இருக்கு; படித்த பெண்களும் இதை நம்புறது பெரும் துயரம்!'தாய்ப்பால் தானம்' தவிர்த்து, புற்றுநோய்க்கான வீரிய சிகிச்சையால் கேசம் இழக்கும் பெண்களுக்கு செயற்கை கேசம் தயாரிக்க தன் கேசத்தை அவ்வப்போது தானமாகவும் கொடுத்து வருகிறார் காயத்ரி.இந்த அனுபவத்தால் பெற்றவை?'ஒரு பெண் தன் உடல் சார்ந்து முடிவெடுக்க சமூக தடைகள் இருக்குறது ஏன்; சமூக வலைதளத்துல பதிவிடுற புகைப்படங்களுக்கு கிடைக்கிற ஆதரவு, இத்தானம் தொடர்பான கருத்துக்கு கிடைக்காதது ஏன்?' - 'தாய்ப்பால் தானம்' தொடர்பான நிகழ்வுகள் இப்படி பல கேள்விகளை எனக்குள்ளே எழுப்பியிருக்கு; பதில்களை தேடிட்டு இருக்குறேன்.காயத்ரியின்புதுப்புது அர்த்தங்கள்* தானம்?அன்பு* கேள்வி?சாவி* உரிமை?சுவாசம்