இதயத்திருடி
என் அம்மா...அசுத்தங்களை எரித்து சுத்திகரிக்கும் நெருப்பு அவள்; ஒரு சிரிப்பில் கோடானுகோடி அழகுகளை தோரணமாட வைப்பவள் அவள்; அவள் மடியில் தலை வைத்து படுக்கும்போது, நீண்ட மெல்லிய விரல்களால் தடவி, 'உனக்கு டான்ஸ் கத்து தரப்போறேன்; நல்ல வாகான உடம்பு' என்றோ, 'என்ன அடர்த்தியடி மயிர்' என்றோ சர்வசாதாரணமான ஒன்றைத்தான் சொல்வாள். ஆனால், மனதில் குல்லென்று எதுவோ மலரும்.அன்று தீபாவளி. அம்மா ஊரில் இல்லை. நான் கட்டியிருந்த புதுப்பாவாடையில் அங்கும் இங்கும் கறைகள். 'ஹோ...'வென்று அழுகை முட்டியது.முறுக்கு பிழிய வரும் மொட்டை பாட்டி, 'என்னடீம்மா அழறே; என்ன ஆயிடுத்து இப்போ; லோகத்துல இல்லாதது ஆயிடுத்தா?' என்றாள்.'அம்மாவை பார்க்க வேண்டும்' என்றது மனது. அம்மா தலையைத் தடவித் தருவாளா; கண்களைத் தாழ்த்தி என்னைப் பார்த்தவாறே, 'உனக்கு ஆகியிருக்கும் இதுவும் அழகுதான்' என்பாளா? மறுநாள் காலை அம்மா வந்தாள்.வாழைத்தண்டு போல் நீண்ட தன் கரங்களால் அவள் என்னை அணைக்கப் போகிறாள்; நான் அழப்போகிறேன். இதோ... அம்மா என்னை பார்க்கிறாள்.'உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம்; இது வேற இனிமே பாரம்!' சுளீரென்று கேள்வி.'பெண் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியும்!' - சொன்னது யாரடி?படைப்பு: 'அம்மா ஒரு கொலை செய்தாள்' சிறுகதைஎழுதியவர்: அம்பைவெளியீடு: காலச்சுவடு