உள்ளூர் செய்திகள்

ஞாபக மறதியை விரட்டும் வழி

ஞாபக மறதி என்ற நோய், பலரை பிடித்து ஆட்டுகிறது. இதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். வயது ஆக, ஆக இப்பிரச்னை வருவது இயல்பு. மூளையின் செயல்பாட்டுத்திறன் குறையும் போது, மூளையின் திசுக்கள் சுருங்குவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்ப்பது கடினம். ஞாபக சக்தி குறைந்தால், அல்சைமர்ஸ் என்ற வியாதி தாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது முதுமையால் ஏற்படும் குறை. இவற்றை நாம் போக்க முடியாது. ஆனால், இதன் வேகத்தை கட்டுப்படுத்தி, மூளை செயலிழக்காமல் குறைக்கலாம். பிரீ ரேடிக்கல்ஸ் எனப்படும், ஒவ்வாமை சக்திகள், நம் உடலில் சேராதவாறு பார்த்துக் கொண்டால், இவை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இல்லையென்றால் மூளையின் அமைப்பே முற்றிலும் பாதிக்கப்படும். இவை சிகரெட் புகை, நச்சுக்காற்று, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை வாயிலாக, நம் மூளைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிவப்பு மாமிசமான மாட்டிறைச்சியில், அதிக கொழுப்பு உள்ளதால், இதை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் உண்ண வேண்டும். இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், ரேடிக்கல்ஸ் அழிக்கப்படும். மறதி தன்மை குறையும். மூளைக்கு ரத்தம் சென்று கொண்டே இருக்க வேண்டும். எனவே உடற்பயிற்சி, நடை பயிற்சி அவசியம். இது மூளைக்கு மிகவும் அவசியமானது. புதிது புதிதாக ஏதாவது வேலைகள், சவால் விடும் வேலைகளை மூளைக்கு நாம் தர வேண்டும். அதனால் இதன் அமைப்பு, திசுக்கள் ஆக்கமடைந்து, புத்துணர்வு பெற்று செயல்படும். இச்செயல்பாடுகளால் மூப்பில் வரக்கூடிய, ஞாபக மறதி நோய் நம்மை நெருங்காது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், புதியதாக ஏதாவது சங்கீத வாத்தியத்தை கற்றுக் கொள்ளலாம். வயலின், வீணை, கிடார் போன்றவை நம் நரம்பைத் தூண்டி, சப்தங்களால் நம் உறுப்புகளை நன்றாக செயல்பட வைக்கும். செஸ் ஆடுதல் சிந்தனையைத் தூண்டும், மூளையின் முன்பகுதி, பின் பகுதி ஆக்கம் பெறும். கை, கால்களை ஆட்டினால் நரம்புகள் தூண்டப்படும். அதில் மூளை சுறுசுறுப்பு அடையும். புத்தகங்கள் படிக்கலாம். மனம், மூளை, கண்கள் போன்றவை நன்கு செயல்படுவது நல்ல பயிற்சியாகும். இவைகள் நம் மூளையை வளப்படுத்தும். ஞாபக மறதி வியாதியை விரைவில் விரட்டும். சோம்பலாக இருக்கும் போது உடற்பயிற்சி, இசை கேட்டல், விளையாடுதல் போன்ற மனதுக்கு உற்சாகம் தரும் விஷயங்களில் ஈடுபடுவது, ஞாபக மறதியை விரட்ட நல்ல வழியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்