நலம் தரும் சித்தா
சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் அழகாக இல்லா விட்டாலும், அதனுள்ளே இருக்கும் சதைப்பற்று அமிர்தத்துக்கு நிகரானது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே, அரிய மருத்துவக் குணங்களை கொண்டது. நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து என, பல சத்துகள் அடங்கியுள்ளது.செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், பிரச்னை தீரும். இலைகளை அரைத்து, புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும். வெட்டுப்புண்கள் மற்றும் தீக்காயங்கள் மீது, இந்த இலையை அரைத்து பூசி வர ஆறிவிடும்.முடி உதிர்வுக்கு தீர்வு: சீத்தாப்பழ விதையின் பொடியோடு, கடலை மாவு கலந்து, எலுமிச்சை சாறில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர, முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இருதய பலவீனம் உள்ளவர்கள், இப்பழத்தை சாப்பிட்டு வந்தால், இருதயத்தில் உள்ள தமனிகள், நன்றாக செயல்படும். முள் சீத்தாவில், இயற்கையாகவே பல ரகங்கள் உள்ளன. இதிலுள்ள 'அசிட்டோஜெனின்' என்ற மருந்துப் பொருள், மருத்துவ தன்மைக்கு காரணமாக விளங்குகிறது.முள் சீத்தாவில், புற்றுநோய் எதிர்ப்பு வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இது மட்டுமின்றி, மூட்டுவலி, சிறுநீரகப்பிரச்னை, குடல்புழு போன்ற தொல்லைகளில் இருந்தும், இப்பழங்கள், நமக்கு நிவாரணம் தருகின்றன. பழத்தில், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளன. ஒரு பழம், சுமார், 60 கலோரி சக்தியை தரவல்லது.கூந்தல் தைலம்: முடியை பாதுகாக்கும் வைட்டமின் 'ஏ', இதில் அதிகம் உள்ளது. இந்தியாவில் பல இடங்களில், இதை, தலைமுடிக்கான எண்ணெயாக பயன்படுத்துகின்றனர். முடியை பாதுகாக்கும் வைட்டமின் 'ஏ', அதிகம் உள்ளது. பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம், கூந்தல் தைலம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பழத்தில், சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான், அதிக இனிப்பு சுவையை தருகிறது.பழத்தில், ஈரப்பதம் 70.5 சதவீதம், புரதம் 1.6, கொழுப்பு 0.4, மணிச்சத்து 0.9, நார்ச்சத்து 3.1 சதவீதம், கால்சியம் 17 மி.கி., பாஸ்பரஸ் 47 மி.கி., இரும்புச்சத்து 4.31 மி.கி., வைட்டமின் 'சி' 37 மி.கி., ஆகியவை அடங்கியுள்ளன. சிறுவர்களுக்கு கொடுத்து வந்தால், உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். குளிர் காய்ச்சலை குணப்படுத்தும். தலைக்கும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம், குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.பித்தம் விலகும்: ஆரம்ப நிலை காசநோயை குணப்படுத்தும் சக்தி, இதற்கு உண்டு. சீத்தா பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் தீராத தாகம் தணிந்து, உடல் குளிர்ச்சி பெறும். தொடர்ந்து வாந்தி, குமட்டல் ஏற்பட்டால், ஒரு பழத்தை மென்று தின்றால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீத்தா பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவோர், சீத்தா பழச்சாறுடன், சிறிது எலுமிச்ச பழச்சாறு கலந்து பருகினால், தாராளமாக பிரியும்.சீத்தா பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும். இரவில், ஒரு சீத்தாபழத்துடன், இரண்டு பேரிச்சம் பழமும் தின்றால், நன்றாக தூக்கம் வரும்.