பாத வெடிப்பால் படாதபாடு முதியோரே....இதோ தீர்வு
கோவை: வயதாகும்போது உடலில் ஏற்படும் மாற்றங்களில் பாதங்கள் வறண்டு போவதும், குதிகால்களில் வெடிப்பு ஏற்படுவதும் பொதுவான பிரச்னை. ஆரம்பத்தில் சிறிய கோடுகளாகத் தெரியும் இந்த வெடிப்புகள், கவனிக்காமல் விட்டால், ஆழமாகி ரத்தக் கசிவு, வலி மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்கிறார், தோல் மருத்துவர் டாக்டர் அருணா ஜெயராம்.அவர் நம்மிடம் பகிர்ந்தவை:பாதங்களின் அடிப்பகுதியில் எண்ணெய்ச் சுரப்பிகள் இல்லாததால், அவை எளிதில் வறண்டு போகின்றன. நீண்ட நேரம் நிற்பது, காலணிகள் இல்லாமல் கரடுமுரடான தரையில் நடப்பது, உடலில் நீர்ச்சத்து குறைவது ஆகியவையும் பாத வெடிப்புக்கு முக்கிய காரணங்களாகும்.பராமரிப்பும், தீர்வும்* தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு அல்லது எலுமிச்சை சாறு கலந்து, 10 - 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்க வேண்டும். இது இறந்த செல்களை மென்மையாக்கும்.* பின், பியூமிஸ் கல் அல்லது மென்மையான பிரஷ் கொண்டு குதிகால் பகுதியை மெதுவாக தேய்த்து இறந்த தோலை நீக்க வேண்டும். மிகவும் அழுத்தி தேய்ப்பதை தவிர்க்கவும்.* ஈரம் காய்ந்ததும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வாசலின் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் கால் வெடிப்பு கிரீம்களை தடவ வேண்டும்.* இரவில் எண்ணெய் அல்லது கிரீம் தடவிய பின், மெல்லிய பருத்தி சாக்ஸ் அணிந்து உறங்குவது, ஈரப்பதம் ஆவியாகாமல் தடுத்து, பாதங்களை விரைவில் மென்மையாக்கும்.* வீட்டிற்குள்ளும், வெளியில் செல்லும்போதும் கடினமான காலணிகளைத் தவிர்த்து, குதிகாலுக்கு வலி ஏற்படுத்தாத காலணிகளை அணிய வேண்டும். வெறும் காலில் நடப்பதை தவிர்ப்பது நல்லது.* தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ஈ, ஒமேகா-3 மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.பாத வெடிப்பு ஆழமாகி ரத்தம் வடிந்தாலோ, வீக்கம், சிவந்து போதல் அல்லது சீழ் பிடித்தாலோ சுய வைத்தியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறிய வெடிப்பு ஏற்பட்டாலே மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.