உள்ளூர் செய்திகள்

வாய்ப்புண் பிரச்னை இதோ இருக்கு தீர்வு

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். குழந்தை முதல், முதியோர் வரை, இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு, வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும், இதன் தாக்கம் அதிகமிருக்கும். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், வாய்ப்புண் மீண்டும், மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். நீண்ட நாட்களுக்கு, சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு, இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால், ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, வாய்ப்புண் வரும். ஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது. வாய்ப்புண் வருவதற்கு, ஒவ்வாமையும் முக்கிய காரணம். உணவு ஒவ்வாமை - குறிப்பாக செயற்கை வண்ண உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாக கூறலாம். அதிகமாக கவலைப்பட்டாலும், வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில், மன அழுத்தம் அதிகரிப்பதால், வாய்ப்புண் வரும் வாய்ப்புள்ளது. வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும், வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம், தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து, வாய்க்கு வந்துவிடும். அப்போது, தொண்டையிலும், வாயிலும் புண் ஏற்படும். கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது, கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது, பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாக பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட, வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது, நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது, வாயில் புண் வருவது வழக்கம். கான்டிடா ஆல்பிகன்ஸ்' எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால், நாக்கில் கட்டித் தயிர் போல, வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்