உள்ளூர் செய்திகள்

மாரடைப்பு எப்படி உருவாகிறது?

நீரிழிவு நோய், புகைப்பிடிக்கும் பழக்கம், அதிக உடல் பருமன், போதிய உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை உள்ளிட்ட காரணங்களால், பல ஆண்டுகளாக நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பு உடலில் சேரலாம். இதனுடன் தொடர்புடைய கொழுப்பு சார்ந்த மாற்றங்கள் ரத்த நாளங்களின் உட்புறச் சுவரில் படிப்படியாகப் படிந்து, அடைப்பை உருவாக்கத் தொடங்குகின்றன. காலப்போக்கில் இந்த அடைப்பு அதிகரித்து, ரத்த நாளத்தின் உள் அளவு குறையத் தொடங்குகிறது. 70 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்ட பிறகும், பலருக்கு அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம். நேற்று வரை ஆரோக்கியமாக டென்னிஸ் விளையாடிக்கொண்டு, நடைப்பயிற்சி செய்துகொண்டு இருந்த ஒருவருக்கு, திடீரென எப்படி ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டது என்ற சந்தேகம் எழலாம். உண்மையில், அது அந்த நாளில் புதிதாக உருவான அடைப்பு அல்ல. பல ஆண்டுகளாகப் படிப்படியாக உருவான அடைப்பே, ஒரு கட்டத்தில் முழுமையான அடைப்பாக மாறி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தாலும், மாற்று வழிகளில் ரத்த ஓட்டம் தொடர்ந்து கிடைப்பதால் நீண்ட காலம் எந்த அறிகுறியும் இருக்காது. வேகமாக நடப்பது, அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி, கடுமையான மன அழுத்தம், பதற்றம் போன்ற சூழல்களில் இதயத்துக்கு அதிக அளவில் ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவைப்படும். ஏற்கனவே சுருங்கியுள்ள ரத்த நாளத்தில், போதுமான அளவு ரத்த ஓட்டம் இல்லாவிட்டால், நெஞ்சுவலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். ரத்த நாளம் முழுமையாக அடைபட்டால், இதயத் தசைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. எச்சரிக்கை அறிகுறிகள் மாரடைப்பு என்றால் உடனே நெஞ்சுவலி, வியர்வை, மயக்கம் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் எல்லா மாரடைப்புகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் வெளிப்படுவதில்லை. சிலருக்கு நெஞ்சுவலி இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம். திடீர் மூச்சுத்திணறல், வழக்கத்திற்கு மாறான அதிக அசதி போன்ற அறிகுறிகளும் இதயத்தின் எச்சரிக்கையாக இருக்கலாம். மாரடைப்பின்போது மார்பின் நடுப்பகுதியில் அழுத்தம், இறுக்கம், வலி ஏற்படும். சிலருக்கு அந்த வலி இடது தோள்பட்டை, இடது கை, முதுகு, கழுத்து, தாடைக்கும் பரவும். சிலருக்கு வலி ஏற்படாமல் எரிச்சல் போன்ற உணர்வாகவும் அது வெளிப்படும். சிலருக்கு திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிக அசதி ஏற்படும். சிறிதளவு நடந்தாலே மூச்சுத்திணறல் ஏற்படும். ஆஸ்துமா இல்லாதவருக்கும், புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவருக்கும் நடைப்பயிற்சி, மாடிப்படி ஏறுதல், உடல் உழைப்பின்போது புதிதாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், இதயத்தையும் பரிசோதிக்க வேண்டியிருக்கும். நடந்தால் புத்துணர்ச்சி... பொதுவாக நடைப்பயிற்சி முடித்த பிறகு புத்துணர்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால் சிறிது துாரம் நடந்தாலே வழக்கத்திற்கு மாறாக அதிக அசதி ஏற்படுவது, திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற மாற்றங்கள் இருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கழுத்து எலும்புத் தேய்மானம் போன்ற பிற காரணங்களாலும் வலி ஏற்படலாம். ஆனால் இதனுடன் அதிக அசதி, வியர்வை போன்ற அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை. சர்க்கரை நோயாளிகளுக்கு வலி உணரும் தன்மை குறைவதால், இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் வலி தெரியாமல் இருக்கலாம். இளம் வயதினருக்கும் ஆபத்து முன்பெல்லாம் இதய நோயும் உயர் ரத்த அழுத்தமும் வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளாகவே கருதப்பட்டன. ஆனால் இன்று இளம் வயதினரிடமும் இதய நோயைக் காண முடிகிறது. கல்லுாரி மாணவர்கள்கூட மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது தான் இதய நோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாக உள்ளன. குடும்பத்தில் மூதாதையர்களுக்கு இளம் வயதிலேயே இதய நோய் ஏற்பட்டிருந்தால், அடுத்த தலைமுறையினர் தங்களுடைய இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இளம் வயதிலிருந்தே குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளை செய்வதுடன் உணவு, உடல் எடை மற்றும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு... மெனோபாஸ் ஏற்பட்ட பிறகு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவு குறைவதால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெண்களுக்கும் உள்ளது. உணவும் உடற்பயிற்சியும் எந்த வகையான உணவாக இருந்தாலும், உடல் உழைப்புக்கு ஏற்ற அளவில் சாப்பிட வேண்டும். காய்கறிகளை ஆவியில் வேகவைத்தோ, குழம்பாகவோ சாப்பிடலாம். பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவு சாப்பிடுபவர்கள், எண்ணெயில் பொரித்துச் சாப்பிடுவதைவிட குழம்பாக சமைத்தோ, கிரில் முறையில் வேகவைத்தோ சாப்பிடுவது நல்லது. எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்தக் கூடாது. எண்ணெயை தொடர்ந்து அதிக வெப்பத்துக்கு உட்படுத்தும்போது அதன் வேதியியல் தன்மையில் மாற்றங்கள் ஏற்பட்டு, உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். உடற் பயிற்சி, நடைப் பயிற்சிக்காக தினமும் தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டும். இதயம் வெளிப்படுத்தும் ஒவ்வோர் எச்சரிக்கையையும் சரியான நேரத்தில் கவனிப்பதே, பெரிய பாதிப்பைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும். டாக்டர் ச. தணிகாசலம்தலைவர் மற்றும் இயக்குநர் இதய மருத்துவ மையம் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். stsrmc@yahoo.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்