"நகங்களில் நோய் அறிகுறி தெரியுமா
சமீபத்தில் எனக்கு மூச்சுத் திணறல் வந்ததால் மருத்துவரிடம் சென்றேன். அவர் கைவிரல் நகங்களை பரிசோதித்தார். விரல் நகங்களை கவனித்து, நோயை கண்டறிய முடியுமா?ஆம். விரல் நகங்களில் ஏற்படும் சில மாறுதல்களை வைத்தும், உடலில் இருக்கும் பிரச்னையை கண்டறிய முடியும். சாதாரணமாக நகங்கள் தட்டையாக இருக்கும். ஆனால் உடலில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால், நகங்களின் வடிவம் மாறும். இதனால், 'நெயில் ஆன்சுலேஷன்' அதிகமாகும். இந்த அறிகுறி, உங்கள் உடலில் இருந்தால், அது இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகவோ, நுரையீரல் பிரச்னையாகவோ இருக்கலாம். மேலும் நகங்களில் ஏற்படும் நிறமாற்றத்தை, 'சையனாசிஸ்' என்பர். இதுவும், ஹேப்போக்சியா என்ற ஆக்சிஜன் குறைபாட்டால் வருவதே. அதனால் ஒரு சிறந்த மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்யும்போது, தலை முதல் கால் வரை முழுவதுமாக பரிசோதனை செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலே பல நோய்களை சரியாக கண்டறிய முடியும். எனக்கு அவ்வப்போது சளிபிடிக்கிறது. மருத்துவரிடம் காண்பித்தால், ஒருவாரத்தில் சரியாகிவிடும். தற்போது கடந்த இருநாட்களாக சளி, இருமல், இளைப்புக்காக மருத்துவரிடம் சென்றபோது, உறிஞ்சும் மருந்தை (இன்ஹேலர்) எடுத்துக் கொள்ளும்படி கூறினார். ஏன்?ஒவ்வொரு தடவையும் நீங்கள் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது, இருமல் குறைந்திருக்கும். ஆனால் நுரையீரலில் உள்ள பிரச்னை முழுமையாக குணமடைந்திருக்காது. நுரையீரல் பிரச்னை இருக்கும்போதே, இருமல் குறைந்துவிடும். உடனே நீங்கள் மாத்திரைகளை நிறுத்தியிருப்பீர்கள். இப்படி செய்யும் போது நுரையீரல் கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, தற்போது இளைப்பு வரும் அளவிற்கு பாதிப்படைந்துள்ளது.எப்போதும், நோய்க்கு அதன் அறிகுறிகளை வைத்து மட்டும் மருந்து கொடுக்கக் கூடாது. அதற்கான காரணியையும் ஆராய்ந்துதான் மருந்துகள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது முழுநிவாரணம் தரும். எனவே நீங்கள் இன்ஹேலர் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.எனது உறவினருக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளது. மருத்துவரிடம் ஆலோசித்தபோது, அவர் கழுத்துப் பகுதியில் உள்ள, கழுத்துப் பட்டை எலும்பு உள்ள பகுதியில் பரிசோதனை செய்தார். அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்றார், ஏன்?நுரையீரலில் உள்ள புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கு பரவி உள்ளதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அப்படி பரவி இருந்தால் அறுவை சிகிச்சை செய்வது நல்லதல்ல. நீங்கள் சொன்ன அந்த 'கிளேவிகிள்' எலும்பு உள்ள பகுதியில், கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அதை, 'சூப்ராகிளேவிகுலஸ் நோடு' என்பர். இது நுரையீரல் புற்றுநோயின் நான்காம் நிலை. நுரையீரலில் இருந்து பிற பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவி உள்ளதை நமக்கு உணர்த்தும். இது மிகவும் மோசமான அறிகுறி. ஆகவே இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. 'பல்லியேடிவ் ஹீமோதெரபி' போன்ற சிகிச்சைகள் செய்வதே நல்லது.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425 24147