உள்ளூர் செய்திகள்

அதிகாலை தரும் புத்துணர்வு!

நீண்ட நேரம் தூங்கினால் தான், உடல் நலத்துக்கு நல்லது என்று, பலரின் நினைப்பாக இருக்கிறது. விடுமுறை நாட்களில், நேரம் கடந்து எழுந்திருப்போர் தான், இன்று அதிகம். ஆனால், எட்டு மணி நேரம் தூக்கம் போதும், உற்சாகம் பிறக்க. அதிகாலையில் எழும் பழக்கம், துவக்கத்தில் சற்று சிரமமாகத் தான் இருக்கும். நாளடைவில், அதுவே பழக்கமாகி விடும். குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் எழ முடியாவிட்டால், கடிகாரத்தில் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம்.பிரம்ம முகூர்த்தம் என்று öசால்லப்படுகிற, அதிகாலை 4 மணி முதல், 6 மணிக்கும் எழுந்தால், உடலில் உள்ள வாதம் சீர்கெடாது. அதிகாலையில் புத்தம் புதிய காற்று வளிமண்டலத்திலிருந்து நமக்கு கிடைக்கும். சுத்தமான காற்றை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம் சீராகி, நோய்கள் தாக்கும் அபாயம் குறைந்தே போகும்.இரவில் நல்ல தூக்கம்: அதிகாலையில் எழுவோர், சுறுசுறுப்பாக இருப்பதும், தாமதமாக எழுவோர், மந்தத்தன்மையோடு இருப்பதும், புதிய காற்றை சுவாசிக்க முடியாமல் போவது தான். அதிகாலையில் தூங்கி எழுவதால், மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுத்தப்படும். அதிகாலையில் எழும் பழக்கத்தை கையாண்டால், இரவிலும் நல்ல தூக்கம் பிடிக்கும். மேலும், இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால், அரை வயிறுக்கு தான் உணவு உட்கொள்ள வேண்டும்.கால் வயிறு நீர் குடித்து, கால் வயிற்றை காலியாக வைக்க வேண்டும். அப்போது, ஜீரண சக்திக்கு எவ்வித இடையூறும் இருக்காது. தூங்க செல்லும் முன் குளியல் மேற்கொண்டால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தை பெறலாம். அதிலும், இரவில் சீக்கிரம் குளித்துவிட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும்.உணவில் கவனம்: இரவில் தாமதமாக, அதுவும் ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக, அசைவ உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், செரிமானம் சீராக நடைபெற்று, தூக்கத்துக்கு இடையூறு ஏதும் நேராமல் இருக்கும். தூக்கத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிம்மதியான தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால், காலையில் வேகமாக எழலாம்.அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பின், மனதை அமைதிப்படுத்த வெளியே காற்றோட்டமாக சிறிது தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால், இரவில் நிச்சயம் நல்ல தூக்கத்தை பெற்று, அதிகாலையில் வேகமாக எழ முடியும் அதிகாலை எழுந்தவுடன், உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த நேரத்தில் விழிப்பவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். உடல் நலக்குறைவு கொண்டவர்கள் கூட, அதிகாலையில் எழும் பழக்கத்தை வழக்கப்படுத்தினால், உடல் நலம் சீராக இருக்க வாய்ப்பு உருவாகும்.உடலில் உள்ள கழிவுகள் காலையிலேயே வெளியேறாவிட்டால், பின் அந்த நாளானது அசவுகரியமானதாக இருக்கும். எனவே, உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதுவும், காலையில் செய்யும் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்று. தவிர, அன்றைய நாளுக்கு, என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து, அதன்படி, நேரம் தவறாது முடிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்