'அவசர சிகிச்சை மட்டுமே, மருத்துவர்கள் நேரடியாக மேற்கொள்ள வேண்டும். ஆபத்தில்லாத பிரச்னைகளுக்கு, மருத்துவமனைக்கு நேரில் வர வேண்டாம்' என்று வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, அரசு நிபந்தனை விதித்து உள்ளதால், ஊரடங்கு நாட்களில், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்.அதிக ரத்தப் போக்கு, கர்ப்பப்பையில் பைப்ராய்டு கட்டி உட்பட, பல தொந்தரவுகளுக்கு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள், ஊரடங்கால், தங்கள் மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
மன அழுத்தம்
கர்ப்பிணிகளை பொறுத்தவரை, பொது போக்குவரத்தை நம்பி இருப்பவர்களால், மருத்துவமனைக்கு வர முடியவில்லை. கர்ப்பத்தின் கடைசி சில வாரங்கள், நடைப்பயிற்சி செய்வது, மாடியில் உட்கார்வது என்று இருப்பர். வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலையில், மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால், சிலருக்கு குழந்தையை சுற்றி இருக்கும் நீர், குறைய ஆரம்பித்து விட்டது. நீர் குறைந்தால், சுகப் பிரசவத்திற்கு முயற்சி செய்தாலும், குழந்தை வெளியில் வர ஒத்துழைக்காது; கர்ப்பப்பை வாய் ஒத்துழைக்காது. அதனால், பெரும்பாலானவர்களுக்கு, 'சிசேரியன்' செய்ய வேண்டிய நிலையே ஏற்படுகிறது.குழந்தையின் உடல் எடை, வழக்கத்தை விட குறைந்து விட்டது. இவையெல்லாம் மன அழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்னைகள்.கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ஊட்டச் சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளால், 35 - 40 வார கர்ப்பிணிகள், கடந்த, 40 நாட்களில் சந்தித்த பிரச்னைகள்.இன்னொரு தரப்பில் பார்த்தால், புதிதாக கர்ப்பம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்தவர்கள், இந்த, 40 நாட்களில் இயல்பாகவே கர்ப்பம் தரித்து உள்ளனர்.இந்த கொரோனா காலத்தில், டாக்டர் - நோயாளி உறவின் நடுவிலேயே, ஒரு தடுப்பு சுவர் விழுந்ததை போன்று இருக்கிறது. பல ஆண்டுகளாக பழகிய நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினருடன் தள்ளி நின்று தான், ஆலோசனை தர வேண்டிய நிலை உள்ளது.எல்லா நோயாளியும், கொரோனா நோய் தான் என்று நினைத்து சிகிச்சை செய்ய வேண்டிய நிலை, எங்களுக்கு! விருப்பம் இல்லாவிட்டாலும், அந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.'டெலி மெடிசின்' வழியாக ஆலோசனை கொடுக்கிறோம். தேவையெனில், ஒரு நாள் மட்டும் வரச் சொல்லி, 'ஸ்கேன்' செய்து பார்த்து, எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால், அனுப்பி விடுகிறோம்.
பிரச்னை
'ஊரடங்கு ஒரு தனி நபருக்கு ஏற்பட்ட பிரச்னை இல்லை; உலகம் முழுதும் வந்திருக்கிறது. அதனால், 'டென்ஷன்' ஆகி ஒரு பலனும் இல்லை. குழந்தை ஆரோக்கியமாக பிறப்பது முக்கியம்' என்று, மனநல ஆலோசகர்கள் மூலம் அறிவுறுத்துகிறோம்.எந்த பிரச்னையாக இருந்தாலும், கர்ப்பிணியை பாதுகாத்து, 37, 38 வாரங்களுக்கு பின் தான், பிரசவம் ஆக வேண்டும். கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்த போது, பிறந்த குழந்தைகள், தொற்று பாதித்த குழந்தைகள் போன்றவற்றை பற்றி, தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன. பிறந்த குழந்தைக்கு, தாயின் மூலம் தொற்று வராது; சுற்றுச்சூழல் அல்லது மற்றவர்களிடம் இருந்தே வருகிறது.தொற்றின் பாதிப்பு எப்படி இருக்கும், இதனால் எதிர்காலத்தில் வேறு உடல் பாதிப்புகள் வருமா என்பது பற்றிய முடிவுகள் தெரிய, சில மாதங்கள் ஆகலாம்.
டாக்டர் என்.எஸ்.கனிமொழி,மகப்பேறு மருத்துவர்,சென்னை.98402 99077