உள்ளூர் செய்திகள்

நீங்களும் அமைக்கலாம் மூலிகை தோட்டம்!

வீட்டுத்தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் இருக்கும் பலருக்கும், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது போன்ற வேலைகளை நினைத்தாலே, மலைப்பாகி விடும். அத்தகையவர்கள், காய்கறி செடிகளுக்கு பதிலாக, வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். குறைந்த பராமரிப்பு செய்தால் போதும்; அதிகப்பயன்களை தரக்கூடிய மூலிகைச் செடிகளை தேர்வு செய்து வீட்டில் வளர்க்கலாம்.நிறைய இடவசதி தேவை இல்லை. சிறிய பூந்தொட்டிகளில் கூட சில மூலிகை செடிகளை வளர்க்க முடியும். காய்ச்சல், தலைவலி, சிறிய காயம் போன்ற சின்னச் சின்ன உபாதைகளுக்கு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய மூலிகைச் செடிகள் வருமாறு:வல்லாரைக் கீரை: குழந்தைகளுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் திறன் கொண்ட மூலிகை இது. வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இதில் அதிகம். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயலைச் செய்யும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. இதயத்தைப் பலப்படுத்தவும், தாது விருத்திக்கும் ஏற்றது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால், குடல் புண், குடல் நோய், வாய்ப்புண்கள், வாய் நாற்றம் போன்றவை நீங்கும்.துளசி: வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. இது, அருமையான கிருமிநாசினி. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.சீனித்துளசி: தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த செடி, இனிப்புச்சுவை கொண்டது. இதன் இலைகளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இலையை உலர வைத்து பொடியாக்கி, டப்பாக்களில் அடைத்து வைத்து இயற்கை சர்க்கரையாக பயன்படுத்தலாம். இந்த இலைகளில் கலோரிகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பாலக்கீரை: பாலக்கீரை வீட்டில் வளர்க்க ஏற்ற கீரை. இந்தப் பாலக்கீரை வளர வளமான வண்டல் மண் தேவை. பாலக்கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை மட்டுமே வளரக் கூடியது. தொட்டியில் இந்தக்கீரையை விதைத்து 3 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. பாலக்கீரை மூளை வளர்ச்சிக்கு உதவும். இதன் இலைகளைச் சாப்பிடுவதால் குடல்புண்கள் குணமாகும். இதன் சாறு புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.நிலவேம்பு: சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது நிலவேம்பு. கொடி போல் படரக்கூடிய மூலிகைச் செடியாகும். மூலிகையைப் பொடித்து, கஷாயம் செய்து குடித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பசியை தூண்டும். சாதாரண வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்துக் காய்ச்சல்களையும் குணமாக்கும் திறன் கொண்டது.எலுமிச்சம் புல்: எலுமிச்சம் புல் சாற்றிலுள்ள 'சிட்ரால்' என்னும் வேதிப்பொருள், புற்றுநோய் செல்களை அழிக்க கூடியவை. இதனை இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்