உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / மொபைல் போன் இல்லாத இனிய உலகம்

மொபைல் போன் இல்லாத இனிய உலகம்

இன்றைய நவீன உலகில் மனிதனின் ஆறாவது விரலாகவே மொபைல் போன்கள் மாறிவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை உலகத்தோடு இணைப்பதாகத் தோன்றினாலும், நம் பக்கத்தில் இருப்பவர்களிடமிருந்து நம்மை வெகுதூரம் பிரித்து வைத்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.முன்பெல்லாம் ஒரு பேருந்து நிலையத்திலோ அல்லது ஒரு உணவகத்திலோ மக்கள் காத்திருக்கும்போது ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் புன்னகைப்பார்கள், ஏதேனும் உரையாடுவார்கள். ஆனால் இன்று, ஒரு குடும்பமே உணவகத்திற்குச் சென்றாலும், நான்கு பேரும் நான்கு திசையில் அமர்ந்து தத்தமது மொபைல் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உணவு பரிமாறப்படும் வரை அங்கிருப்பது ஒரு குடும்பம் போலத் தெரிவதில்லை; மாறாக, நான்கு அந்நியர்கள் ஒரே மேஜையில் அமர்ந்திருப்பது போலவே இருக்கிறது. இதுதான் இன்றைய சமூகத்தின் எதார்த்த நிலை.குறிப்பாக, மாணவர்களும் இளைஞர்களும் இதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு காலத்தில் நண்பர்கள் சந்தித்தால் மணிக்கணக்காக விளையாடி மகிழ்ந்தார்கள். இன்று, அருகருகே அமர்ந்து கொண்டே 'வாட்ஸ்அப்' மூலம் பேசிக் கொள்கிறார்கள். இதனால் நேருக்கு நேர் பேசும் 'சமூகத் திறன்' குறைந்து வருகிறது.சமூக வலைத்தளங்களில் வரும் 'லைக்'குகளுக்காகவும், தேவையற்ற வீடியோக்களுக்காகவும் இளைஞர்கள் தங்களின் பொன்னான நேரத்தைத் தாரைவார்க்கின்றனர். இது அவர்களின் கல்வி மற்றும் படைப்பாற்றலை மழுங்கடிக்கிறது.இந்த 'டிஜிட்டல் போதை'யிலிருந்து தப்பிக்க அமெரிக்காவில் தற்போது ஒரு புதிய இயக்கம் நண்பர்களால் தொடங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் டான் பாக்ஸ் போன்றவர்கள் முன்னெடுத்த இந்த முயற்சி, பலரையும் வியக்க வைத்துள்ளது.இந்த அமைப்பில் உள்ள நண்பர்கள் வாரம் ஒருமுறை ஒருவரது வீட்டில் சந்திக்கிறார்கள். அப்போது, வீட்டின் வாசலில் செருப்பைக் கழற்றி விடுவது போல, தங்களது மொபைல் போன்களையும் ஒரு பெட்டியிலோ அல்லது வாசலிலோ வைத்துவிட்டு உள்ளே நுழைகிறார்கள்.மொபைல் இல்லாத அந்த சில மணி நேரங்களில் அவர்கள் இயந்திரத் தனம் இல்லாமல் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து, மனம் விட்டுப் பேசி சிரிக்கிறார்கள். சிலர் ஆர்வத்துடன் புத்தகம் வாசிக்கிறார்கள், சிலர் ஓவியம் வரைகிறார்கள், இன்னும் சிலர் நேர்த்தியான கைத்தொழில்களைச் செய்து பழகுகிறார்கள்.இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள், 'ஏதோ ஒரு மாய மயக்கத்தில் அல்லது போதையில் இருந்து விடுபட்டது போன்ற உணர்வு கிடைக்கிறது' என்கிறார்கள். போன் இல்லாத அந்த நேரங்களில் மனம் அமைதி அடைவதாகவும், இழந்த புத்துணர்ச்சி மீண்டும் கிடைப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் தொடங்கியுள்ள இந்த இயக்கம் தற்போது பல ஊர்களுக்கும் பரவி வருவது ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகும். தொழில்நுட்பம் என்பது நமக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே நம்மை ஆட்கொள்ளக் கூடாது. வாரம் ஒருமுறை நாமும் இதுபோல 'டிஜிட்டல் டிடாக்ஸ்' முறையைக் கடைப்பிடித்தால், சிதைந்து வரும் நம் சமூக உறவுகளையும் நம் மன அமைதியையும் நிச்சயம் மீட்டெடுக்க முடியும்!முயற்சிப்போமா?-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ