உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / மழையால் துண்டிக்கப்பட்ட கிராமத்தின் கதை

மழையால் துண்டிக்கப்பட்ட கிராமத்தின் கதை

குறைந்த காற்றழுத்தத்தால் கனமழை தொடரும்,வடகிழக்கு பருவமழையும் துவங்கிவிட்டது,வங்கக்கடலில் புயல் சின்னமும் உருவாகிவிட்டது ஆகவே மக்களே உங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை' விடப்படுகிறது, வீட்டைவிட்டு வெளியே வராதீர். மழை கொட்டித்தீர்கப் போகிறது என்று ஏகத்துக்கு எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலி சென்னையில் உள்ள பாலங்கள் எல்லாம் 'கார் பார்க்கிங்'கால் புல்லாகிவிட்டது.ஆனால் இரண்டாவது நாள் காலையில் அதாவது இன்று காலையில் தெருவில் வெள்ளம் ஒடுகிறதா? என்று எட்டிப்பார்தால் வெளியே வெயில் அடித்துக் கொண்டு இருந்தது,முதல் நாள் இரவில் இருந்தே மழை இல்லாமல் சென்னை நார்மலாகிவிட்டது.இதெல்லாம் இயற்கை நிகழ்வு, ஒண்ணும் சொல்வதற்கு இல்லை, இப்போதைக்கு கனமழை இல்லை வேலையைப் பாருங்கள் என்று சொல்லி வானிலை இலாகா சொல்லிவிட்டது.வீடு நிறைய வாங்கிக் குவித்த ரொட்டியையும்,பாலையும் என்ன செய்வது என்பது மட்டுமே மக்களின் கவலையாக இருந்ததே தவிர மற்றபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.இந்த மழையால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையாக்கும் என்று அமைச்சர் பிரதானிகள் மார்தட்டிக் கொண்டு இருந்த அதே வேளையில் ஒரு கிராமம் அதுவும் சென்னைக்கு பக்கத்தில் உள்ள கிராமம் மழை நீரால் துண்டிக்கப்பட்டு பாலுக்கு வழியில்லாமல் அழுது கொண்டு இருந்தது.கேள்விப்பட்டு அந்த கிராமத்திற்கு சென்றோம்.திருவள்ளூவர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியம் விளங்கோடு பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட தர்காஸ் கிராமம்தான் அந்தக் கிராமம்.இவ்வளவு நீளமாகச் சொல்வதால் இந்த கிராமம் ஏதோ ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கிறது என்று என்ன வேண்டாம்,சென்னையை அடுத்துள்ள ரெட்ஹில்ஸ்க்கு பக்கத்தில்தான் உள்ளது.நேற்று பெய்த கனமழை இந்த கிராமத்தை சூழ்ந்துகொள்ள கிராமத்தில் உள்ள சுமார் இருநுாறுக்கும் அதிகமான வீட்டில் உள்ள மக்கள் சிறைப்பட்டது போலாயினர்.பள்ளம் காரணமாக தணணீரில் இறங்கி நடக்க பயம், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டாலும், குழந்தைகளுக்கு பால் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டனர்.போன் மூலம் தொடர்பு கொண்டபோது மதியம் வரை யாரும் எட்டிப்பார்க்கவில்லை, காரணம் அந்த கிராமத்திற்குள் போவதற்கு வாகன வழியில்லாததுதான்.போஸ் என்பவர் சில தன்னார்வலர்களை இணைத்துக் கொண்டு தனக்கு சொந்தமான ஜேசிபி மண் அள்ளும் எந்திரத்தின் முன் பகுதியில், பால் ரொட்டி உள்ளீட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்களுக்கு கொடுக்கப் புறப்பட்டார்.கொஞ்சம் ரிஸ்க் என்றாலும் பராவாயில்லை என்று அந்த ஜேசிபி வண்டியின் முன்னால் நாமும் ஏறிக்கொண்டோம்,எங்களைப் பார்த்ததும் மக்களுக்கு ஒரு திருப்தி, எங்கே யாருமே வந்து எட்டிப்பார்க்காமல் போய்விடுவார்களோ? என்று பயந்து கொண்டிருந்தோம் என்று சொல்லி பால்பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டனர்.இது தற்காலிக ஏற்பாடுதான், நாளைக்குள் தண்ணீர் வடியாவிட்டால் அவர்களது நிலமை மேலும் மோசமாகும் என்பதால் அரசு எந்திரம் உடனடியாக செயல்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவேண்டியது அவசரம் மட்டுமல்ல,அவசியமும் கூட.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lion Drsekar
அக் 17, 2024 13:48

பாராட்டுக்கள் தனி ஒரு மனிதர் இப்படி சேவை செய்வது பாராட்டுக்குறியது, தினமலர் ஐயா திரு முருகராஜ் அவர்கள் தேடிக்கண்டு பிடித்து உலகுக்கு காட்டுவதில் வல்லவர், இவரது சேவை நாட்டுக்குத் தேவை, வந்தே மாதரம்


புதிய வீடியோ